பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
பாஜக உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை என்பதை நான் தெளிவாக கூறிவிட்டேன். பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்; எந்த மாற்றமும் இல்லை. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது.
தமிழ்நாடு பாஜக தலைவரை மாற்ற வேண்டும் உள்ளிட்ட, எந்த கோரிக்கையையும் அதிமுக வைக்கவில்லை. கூட்டணி தொடர வேண்டும் என அவரவர்களின் விருப்பத்தை கூறுவது பற்றி நான் என்ன சொல்வது?. கூட்டணி நீடிக்கும் என வி.பி.துரைசாமி கூறியது குறித்து அவரிடமே கேட்க வேண்டும்.
எந்தெந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அதிமுக தோல்வியடைந்தது. வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அமைக்கும் கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். திமுக அரசு 10% வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றம் தொடர்பாக முதல்-அமைச்சர் கூறுவது பொய்.
மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே. தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். திமுக அமைச்சர்கள் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா?. தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய மந்திரிகளின் நிகழ்ச்சிகளில் திமுகவினரும் பங்கேற்கின்றனர்.
காவிரி நீரைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. திமுகவுக்கு ஆட்சி அதிகாரமே முக்கியம்; விவசாயிகள் நலன் அல்ல. பாஜக-அதிமுக கூட்டணி முறிவு நாடகம் அல்ல; கூட்டணி விவகாரத்தில் 'இந்தியா' கூட்டணிதான் நாடகமாடுகிறது. இந்தியா கூட்டணி என்பதே நாடகம்தான், இன்னும் முழு வடிவம் பெறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.