செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை - ஐகோர்ட்டு உத்தரவு


செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 March 2024 8:24 AM GMT (Updated: 13 March 2024 11:01 AM GMT)

செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி வழக்கை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்கமுடியாது எனக்கூறி அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story