நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு...!


நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட  அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு...!
x
தினத்தந்தி 30 Dec 2023 1:41 AM GMT (Updated: 30 Dec 2023 1:44 AM GMT)

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

நெல்லை,

தமிழகம் வரலாறு காணாத மழைப்பொழிவை இந்த மாதம் சந்தித்தது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், பின்னர் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் என அதி கனமழை பெய்தது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதன் காரணமாக அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியவில்லை .

இதில் வட மாவட்டங்களில் தேர்வு தேதியை மாற்றி ஒருவழியாக நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தென் மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருந்ததால் தேர்வுகளை நடத்த முடியவில்லை. மேலும் அரையாண்டு தேர்வு விடுமுறையும் வந்ததால் மற்ற பள்ளிகளை போலவே தென்மாவட்ட பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அரையாண்டு தேர்வானது விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story