ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிப்பு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் அறிவிப்பு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் செந்தில்முருகன் வேட்பாளராக களமிறக்கியுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பலரும் ஆர்வமுடன் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை இன்று அறிவித்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளாரக தென்னரசு போட்டியிடுவார் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இது தொடர்பான தீர்ப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிருவார் என்று எடப்பாடி பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதேவேளை, இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடாமல் விட்டு தருவோம் இல்லையேல் வேட்பாளரை நிறுத்துவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுமா? களத்தில் இருந்து விலகுமா? அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு தருமா? ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கு ஆதரவு தருமா? என்பதில் தொடர்ந்து குழப்பாமான சூழ்நிலையே நிலவி வருகிறது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருகிறார். இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் செந்தில் முருகன் போட்டியிருவார் என்று ஓ.பன்னீர் செல்வம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொள்வோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.


Next Story