நாட்டை சர்வாதிகார பாதைக்கு அழைத்து செல்கிறார் பிரதமர் மோடி- ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மாநில அரசுகளை அச்சுறுத்தி அதிகாரங்களை பறித்ததோடு நாட்டை சர்வாதிகார பாதைக்கு பிரதமர் மோடி அழைத்து செல்கிறார் என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பாரி நகர் பிரசன்ன மகாலில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எம்.பி.பேசியதாவது:-
நரேந்திரமோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதன்பின் நாட்டில் தேர்தலே நடைபெறாது. நாட்டை மோடி சர்வாதிகார பாதைக்கு அழைத்துச் செல்கிறார். மாநில அரசுகளை அச்சுறுத்தி அவற்றின் அதிகாரங்களை பறிக்கின்றனர்.
டாக்டர் அம்பேத்கர் இயற்றி தந்த இந்திய அரசியல் சாசனத்தை கொஞ்சம், கொஞ்சமாக மாற்றி அமைக்க முயற்சிக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே மதம் என்பது கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் என்ற சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுத்துவிடும்.
சுதந்திர இந்தியாவின் 77 ஆண்டு காலத்தில் பல்வேறு மத்திய அரசுகள் பதவி வகித்துள்ளன. அப்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மாநில முதல்-அமைச்சரும் கைது செய்யப்படவில்லை. இன்று 2 மாநில முதல்-அமைச்சர்கள் சிறையில் இருக்கின்றனர். கெஜ்ரிவால் கைது அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகும். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே தேர்தலில் முதல் நோக்கமாக இருக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர் மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், மகளிர் இலவச பஸ் பயணம், காலை சிற்றுண்டி திட்டம் என தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். ஆனால் மோடி தனது தேர்தல் வாக்குறுதிகளாக, கருப்பு பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொரு இந்தியனின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன்.ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்.பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.40 ஆகவும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.35 ஆகவும் விற்க செய்வேன் உள்ளிட்ட எண்ணற்ற வாக்குறுதிகளை தந்தாரே. அதில் எதையாவது நிறைவேற்றினாரா ? மாறாக விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை என இரு பெரும் கொடுமைகளை மக்கள் மீது சுமத்தியுள்ளார்.
எனவே ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்திற்கு கை சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.