காஞ்சீபுரம், செங்கல்பட்டில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு


காஞ்சீபுரம், செங்கல்பட்டில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
x

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களின் முன்னிலையில் வெளியிட்டனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் ஒவ்வொரு ஆண்டும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இந்தத் தேர்தலில் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினர்களை வாக்காளர்களாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களின் முன்னிலையில் வெளியிட்டார். காஞ்சீபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். உள்ளாட்சி தேர்தல் பிரிவு அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி, மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உறுப்பினர்களைக் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) மணிவண்ணன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்றைய நிலையிலுள்ள உள்ளாட்சி அமைப்பு உறுப்பினர்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது.


Next Story