ராமேசுவரம் மீனவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்
ராமேசுவரத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் பலரை இலங்கை கடற்படை சிறைபிடித்து கைது செய்தது. அதில் பலரை நிபந்தனைகளுடன் அந்த நாட்டு கோர்ட்டு விடுவித்தது. ஆனால் ராபர்ட், ஜான் பிரிட்டோ, சாம்சன், நெல்சன், நம்பு முருகன் ஆகிய 5 மீனவர்கள், இலங்கையில் நிறைவேற்றப்பட்ட தமிழக மீனவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 5 மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே நேற்று முதல் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் இன்று 8-வது நாளாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதனால் அரசுக்கு சுமார் ரூ.7 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தில் 2 நாட்களாக மீனவர்கள் நடத்தி வந்த உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தி.மு.க. மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து மீட்டுக் கொடுக்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து மீனவர்கள் தங்களுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர்.