காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு - கொள்ளையர்கள் கைது


காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு - கொள்ளையர்கள் கைது
x

காஞ்சீபுரம் அருகே வடமாநில வாலிபரை தாக்கி செல்போன், பணம் பறித்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம்

ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்தவர் கப்பா புருஷோத்தமம் (வயது 45). இவர் கடந்த 2 ஆண்டுகளாக நீர்வள்ளூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து கப்பா புருஷோத்தமம் நீர்வள்ளூர் கூட்டுச்சாலை அருகே வந்து கொண்டு இருந்தார்.

அப்போது அவரிடம் அடையாளம் தெரியாத 2 நபர்கள் செல்போன் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். கொடுக்க மறுத்த அவரை அரிவாளால் வெட்டி அவரிடமிருந்த செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த புருஷோத்தமம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடந்த தேடுதல் வேட்டையில் வேடல் பெட்ரோல் பங்க் அருகே அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் சோதனையிட்டனர். சோதனையில் 12 செல்போன்கள், அரிவாள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

விசாரணையில் அவர்கள் பரந்தூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (18), திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம் கிராமத்தை சேர்ந்த லோகேஷ் (18) என்பதும், வடமாநில வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story