தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை - நேபாள காவலாளி தப்பி ஓட்டம்


தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் நகை, பணம் கொள்ளை - நேபாள காவலாளி தப்பி ஓட்டம்
x

சென்னையில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தையும் கொள்ளை அடித்துக்கொண்டு, நேபாள காவலாளி தப்பி ஓடிவிட்டார்.

சென்னை

சென்னை ராஜாஅண்ணாமலைபுரம், கிருஷ்ணாபுரி பிஷப்கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் பன்சிதர்குப்தா (வயது 28). தொழில் அதிபரான இவர் பிரபல அகர்வால் இனிப்பு கடை நடத்தி வருகிறார். பாரிமுனையில் இவரது இனிப்பு கடை உள்ளது. வீட்டில் இவரது தாயார் மஞ்சுகுப்தாவும் வசிக்கிறார்.

கடந்த 14-ந் தேதி அன்று காலை வழக்கம்போல, பன்சிதர்குப்தா பாரிமுனையில் உள்ள இனிப்பு கடைக்கு போய்விட்டார். இவரது தாயாரும் வெளியில் சென்று விட்டார். மாலையில் இவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

வீட்டின் முதல் மாடியில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அங்கிருந்த சாவி மூலம் அதை திறந்து அதற்குள் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க காசுகள், மோதிரங்கள், தங்க செயின்கள் போன்றவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.

இவர்கள் வீட்டில் கடந்த 2 மாதங்களாக, வேலை பார்த்து வந்த நேபாள வாலிபர் ராஜன் என்ற திபேந்திரா (20) என்பவர்தான் மேற்படி ரொக்கப்பணம், தங்க நகைகளை கொள்ளை அடித்து தப்பிச்சென்றது தெரியவந்தது.

கொள்ளை வாலிபர் திபேந்திரா வீட்டு வேலைகள் மற்றும் காவலாளி வேலையும் செய்து வந்தார். வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து பணம், நகைகளை அள்ளிக்கொண்டு தப்பி ஓடிவிட்டார். அவர் மீது அபிராமபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுப்பிரமணியன், அபிராமபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டில் விசாரணை நடத்தினார்கள்.

தப்பி ஓடிய திபேந்திராவின் உறவினர்கள் தியாகராயநகரில் வசிக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. திபேந்திரா நேபாளம் தப்பிச்சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் நேபாளம் விரைந்துள்ளனர். இன்னொரு தனிப்படை சென்னையில் அவர் பதுங்கி இருக்கிறாரா? என்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மயிலாப்பூரில் கணவன்-மனைவியை கொன்று வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளை அடித்துக்கொண்டு இதேபோல நேபாள டிரைவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் கைது செய்தனர். இப்போதும் நேபாள காவலாளி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story