நீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்


நீலகிரியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி: பயிர்களை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து பாய்ச்சும் அவலம்
x
தினத்தந்தி 3 May 2024 5:27 AM GMT (Updated: 3 May 2024 7:37 AM GMT)

நீலகிரியில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன.

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் 1,33,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை, 17,000 ஏக்கர் காபி, 2,400 ஏக்கர் பரப்பளவில் மிளகு, 2,000 ஏக்கரில் ஏலக்காய், 15,000 ஏக்கர் பரப்பளவில் மலை காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மலைகாய்கறிகள் விவசாயத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரம் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் தவிர இதில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்கள் உட்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 1 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

நீலகிரியில் நிலவும் காலநிலை மற்றும் மண் தன்மை காரணமாக இங்குள்ள உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் வெள்ளைப் பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளுக்கு நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. நீலகிரியில் ஆண்டிற்கு 3 முறை மலை காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு வழக்கமாக மார்ச் மாதத்தில் கோடை மழை பெய்யும் என்று நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கரில் மலை காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். ஆனால் விவசாயிகள் நினைத்தது போல மழை பெய்யாமல், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டு தண்ணீர் இன்றி காட்சி அளிக்கின்றன.

நீலகிரியில் இந்த ஆண்டு சாகுபடி செய்துள்ள 15 ஆயிரம் ஏக்கரில் கிணற்று பாசனம் தவிர மீதி உள்ள 10 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்படக்கூடிய அபாய நிலை உள்ளது. குறிப்பாக அதிக மலை காய்கறிகளை சாகுபடி செய்யும் முத்தொரை, பாலாடா, கல்லக்கொரை, கப்பத்தொரை, நஞ்சநாடு, பைகமந்து சுற்று வட்டார பகுதிகளில் ஓடும் பாலாடா ஆற்றில் தண்ணீர் இல்லாததால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள மலை காய்கறி பயிர்கள் தண்ணீர் இன்றி வாடி வருகின்றன. எனவே இந்த சாகுபடியால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ள நிலையில் சில விவசாயிகள் பயிரிட்டுள்ள மலை காய்கறி பயிர்களை காப்பாற்ற வறண்டு கிடக்கும் ஆற்றில் பள்ளம் தோண்டி நீண்ட நேரம் காத்திருந்து அதில் தேங்கும் நீரை மோட்டார் மூலம் பாய்ச்சி வருகின்றனர். மேலும் சில விவசாயிகள் ரூ.1000 வரை பணம் கொடுத்து தண்ணீரை வாங்கி லாரிகளில் கொண்டு சென்று மலை காய்கறிகளுக்கு பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மலை காய்கறி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே கோடை மழை இல்லாததால் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி குறைந்து அவற்றின் விலையும் கிடுகிடு என அதிகரித்து வருகிறது. மேலும் இனிவரும் நாட்களில் அவற்றின் விலை பன்மடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிபிலாமேரி கூறுகையில், மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பயிர் பாதிப்பு குறித்து விவரங்கள் சேகரிக்க வருவாய்த் துறை மூலம் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.


Next Story