தந்தையை வெட்டிக்கொன்ற மகன்; குடிக்க பணம் தராததால் ஆத்திரம்


தந்தையை வெட்டிக்கொன்ற மகன்; குடிக்க பணம் தராததால் ஆத்திரம்
x

குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 45). ஸ்ரீபெரும்புதூர் ஆண்கள் உயர்நிலைப்பள்ளி அருகே சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், தினேஷ் (20) என்ற மகனும், திவ்யா (15) என்ற மகளும் உள்ளனர்.

ரேணுகா, சிப்காட்டில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். தினேஷ், 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலைக்கு போகாமல் மதுபானத்துக்கு அடிமையாகி ஊர் சுற்றி வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான தினேசை, கடந்த வருடம்தான் மேல்மருவத்தூர் அருகே அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்து, வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

மேலும் தினேஷின் குடிப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் கடந்த மாதம் அவரை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ், 3 நாளுக்கு முன்பு தான் வீட்டுக்கு வந்தார். மறுவாழ்வு மையத்தில் இருந்து வந்த நாள் முதல் வீட்டில் இருந்தபடியே மதுகுடிக்க பணம் கேட்டு பெற்றோரிடம் சண்டையிட்டு வந்தார்.

கடந்த 2 நாளுக்கு முன்பு தினேஷ், குடிக்க பணம் கேட்டு தந்தையிடம் தகராறு செய் தார். ஆனால் பணம் கொடுக்க மறுத்த ராமு, மாடியில் சென்று படுத்து தூங்கினார்.

மறுநாள் காலை மாடிக்கு சென்ற தினேஷ், அங்கு தூங்கி கொண்டிருந்த தனது தந்தை ராமுவின் கழுத்தில் கத்தியால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் இளநீர் குளம் அருகே பதுங்கி இருந்த தினேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story