சட்டசபையில் கவர்னரை தாக்கி பேசக்கூடாது; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை


சட்டசபையில் கவர்னரை தாக்கி பேசக்கூடாது; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
x
தினத்தந்தி 11 Jan 2023 5:25 AM IST (Updated: 10 Feb 2023 2:58 PM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் நடந்த சம்பவம் தொடர்பாக கவர்னரை தாக்கி யாரும் பேசக்கூடாது என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

வெளிநடப்பு

கவர்னர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கிய இந்த கூட்டத்தின் முதல் நாளே பரபரப்பாக காணப்பட்டது.

'தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்க வேண்டும்' என்று கூறிய கவர்னரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் கவர்னருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

கவர்னருக்கு எதிராக தீர்மானம்

இந்த இடையூறுக்கு இடையே கவர்னர் தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் தனது உரையில் சில வார்த்தைகளை படிக்காமலும், சில வார்த்தைகளை கூடுதலாக சேர்த்தும் பேசினார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

அதைத்தொடர்ந்து கவர்னருக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் கூட்டம் முடிவடைவதற்கு முன்பே கவர்னர் வெளியேறினார். தேசியகீதம் இசைத்த பின்னர்தான் கவர்னர் சட்டசபையை விட்டு செல்வது வழக்கம். ஆனால் கவர்னர் திடீரென புறப்பட்டு சென்றது சட்டசபை கூட்ட வரலாற்றிலேயே நடக்காத ஒன்று.

13-ந் தேதி வரை நடக்கிறது

சட்டசபையில் 2-வது நாளான நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியதோடு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

சட்டசபை கூட்டம் நாளை மறுநாள் (13-ந் தேதி) வரை நடைபெற உள்ள நிலையில், கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதிக்க உள்ளனர்.

இதில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசுவார்கள். நிறைவாக 13-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து உரையாற்ற இருக்கிறார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

முதல்நாள் சட்டசபை கூட்டம் பரபரப்பாக முடிந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, சட்டமன்ற கொறடா கோவி செழியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கவர்னரை தாக்கி பேச வேண்டாம்

கூட்டத்தில் பேசிய கோவி செழியன், 'சட்டசபையில் கவர்னர் நடந்து கொண்ட செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும்' என்று காட்டமாக பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நேற்று (நேற்று முன்தினம்) நடைபெற்ற சம்பவத்தை அப்படியே விட்டுவிடுங்கள். உங்கள் தொகுதி பிரச்சினைகளை பற்றி பேசுங்கள். கவர்னரை பற்றி சட்டசபையில் எதுவும் தாக்கி பேச வேண்டாம். மக்கள் பிரச்சினைகளை பற்றி மட்டும் பேசுங்கள்.

சுவரொட்டி

கவர்னரின் செயல்பாடுகள் குறித்து சட்டப்பூர்வமாக எப்படி அணுகலாம் என்று யோசித்து கொண்டிருக்கிறோம். எனவே, கவர்னரை கண்டித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டவோ, பேனர் வைக்கவோ வேண்டாம். சில இடங்களில் கவர்னருக்கு எதிராக சுவரொட்டி ஒட்டி இருப்பதாக தகவல் வந்தது. அது எதுவும் வேண்டாம்.

எதிர்க்கட்சிகள் ஏதாவது சொல்லி அமளியில் ஈடுபட்டாலும் நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்' என்று கூறினார்.

காலை 11.15 மணிக்கு தொடங்கிய தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் காலை 11.35 மணிக்கு நிறைவடைந்தது. வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Next Story