உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்


உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமருக்கு டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம்
x

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவிப்பதாக டி.ஆர்.பாலு எம்.பி. தெரிவித்துள்ளார்.

சென்னை,

உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து உக்ரைன் நாட்டைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர். உக்ரைனுக்கு மருத்துவ கல்வி பயில சென்ற இந்திய மாணவர்களை சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய அரசு அழைத்து வந்தது.

இந்த நிலையில் உக்ரைனில் தற்போது வரை போர் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அங்கு மருத்துவ படிப்பை பாதியில் விட்டு வந்த மாணவர்கள் தங்கள் படிப்பை மீண்டும் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய அரசு நடவடிக்கை எடுத்து தங்கள் படிப்பை தொடர்வதற்கு உதவ வேண்டும் என அந்த மாணவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் எழுதப்பட்ட அந்த கடிதத்தில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியாவில் மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள 604 மருத்துவ கல்லூரிகளில் ஒரு லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளதாகவும், அதனை நிரப்ப மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் பிரதமர் மோடியிடம் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.


Next Story