கடும் எதிர்ப்பு எதிரொலி: அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கி உத்தரவு சில மணி நேரத்தில் நிறுத்தி வைத்த கவர்னர் - அரசியல் களத்தில் பரபரப்பு


கடும் எதிர்ப்பு எதிரொலி: அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கி உத்தரவு சில மணி நேரத்தில் நிறுத்தி வைத்த கவர்னர் - அரசியல் களத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Jun 2023 8:31 AM IST (Updated: 30 Jun 2023 10:41 AM IST)
t-max-icont-min-icon

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என். ரவி உத்தரவிட்டிருந்தார்.

சென்னை,

திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணமோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே, கடந்த மே 26ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனை கடந்த 2ம் தேதி நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 13-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் அலுவலக அறையிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். 13-ம் தேதி காலை தொடங்கிய சோதனை 14ம் தேதி அதிகாலை 2 மணி வரை நீடித்தது. சோதனைக்கு பின் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது.

கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு இருதய ரத்தக்குழாயில் 3 இடங்களில் அடைப்பு கண்டறியப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜியை கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், 15 நாட்கள் விசாரணை காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்ட சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு நீதிபதி, செந்தில் பாலாஜியை 8 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுமதித்து உத்தரவிட்டார்.

ஆனால் ஐகோர்ட்டு உத்தரவின்படி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தனியார் ஆஸ்பத்திரியில் இருதய அறுவை சிகிச்சைக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் அவரை அமலாக்கத்துறையினரால் விசாரிக்க முடியவில்லை.

செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு இருப்பதால், அவரிடம் இருந்த இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரித்தளித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த மின்சாரம், மரபு சாரா எரிசக்தி மேம்பாடு ஆகிய இலாகாக்களை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும், மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் கருப்பஞ்சாற்றுக்கசண்டு (மொலாசஸ்) ஆகிய இலாகாக்களை அமைச்சர் முத்துசாமிக்கும் கூடுதல் துறைகளாக ஒதுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்தார்.

இந்த இலாகா மாறுதல் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு கவர்னர் அலுவலகத்தில் இருந்து கடந்த 16-ந் தேதி செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், இலாகா மாறுதல் பரிந்துரையை கவர்னர் ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் செந்தில்பாலாஜி சில குற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வதாலும், நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதாலும், அவர் தொடர்ந்து அமைச்சரவையில் நீடிப்பதை கவர்னர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

அதற்கு பதிலடியாக தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 'செந்தில்பாலாஜி பொறுப்பில் இருந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படுகிறது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடருவார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

அதேவேளை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 12-ந் தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தள்ளிவைத்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நேற்று இரவு கவர்னர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக கவர்னர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில்:-

பண பரிமாற்றம், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழங்குகளில் சிக்கி மோசமான குற்ற நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கும், நீதிபரிபாலனைக்கும் இடையூறு செய்கிறார்.

அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்படும் குற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் அவர் இருக்கிறார். மேலும், மாநில போலீசின் விசாரணையில், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடரப்பட்ட சில வழக்குகளும் உள்ளன.

எனவே செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதித்து, அரசியல் சாசன எந்திரத்தை செயல்படவிடாமல் செய்யும் என்ற சந்தேகம் வருவதற்கு சரியான காரணம் உள்ளது.

எனவே இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்கி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசு மற்றும் முதல்-அமைச்சரின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்ட உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியலமைப்பு சட்டத்தை மீறி அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி நீக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம் என்று முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவிற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.

கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்துள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவு தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடமிருந்து உரிய சட்ட நடைமுறைகளை கேட்ட பின் முடிவு எடுக்கும்படி கவர்னர் ஆர்.என். ரவிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என். ரவி கடிதம் அனுப்பியுள்ளதாக் அதகவல் வெளியாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள், சட்டவல்லுனர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story