கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் வினியோகம் செய்ய வாரியம் தயார் நிலை - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்


கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் வினியோகம் செய்ய வாரியம் தயார் நிலை - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
x

கோடை காலத்தில் தங்குதடையின்றி எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் இருக்கிறது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

சென்னையில் கோடை காலத்தில் தங்குதடையின்றி சீரான மின்சார வினியோகம் செய்வது குறித்து, அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார வாரிய அதிகாரிகளுடன், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அண்ணா சாலையில் செயல்படும் மின்னகம் மையத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

அப்போது மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, இயக்குனர் (வினியோகம்) சிவலிங்க ராஜன், மின்தொடரமைப்பு கழக மேலாண்மை இயக்குனர் மணிவண்ணன் மற்றும் முதன்மை பொறியாளர்கள், தலைமை பொறியாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் மின்சார தேவை கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2020-2021-ம் ஆண்டில் தமிழகத்தின் மொத்த தினசரி மின்சார தேவை 16 ஆயிரத்து 481 மெகாவாட் அளவாக இருந்தது. தற்போது 2023-2024-ம் ஆண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 19 ஆயிரத்து 387 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் அதிகபட்ச மின்சார நுகர்வு ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் ஒரு நாள் மின்சார நுகர்வு அதிகபட்சமாக 423 மில்லியன் யூனிட் அளவுக்கு உயர்ந்துள்ளது.

இது கடந்த 2019-2020-ம் ஆண்டில் 369 மில்லியன் யூனிட் அளவு மட்டுமே இருந்தது. மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ள போதிலும் எவ்வித பாதிப்பும் இன்றி தமிழகம் முழுவதும் சீரான மின்சார வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் தினசரி மின்சார தேவையும் அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச மின்சார தேவை கடந்த 2019-2020-ம் ஆண்டு 3 ஆயிரத்து 738 மெகா வாட்டாக இருந்தது. தற்போது அது 4 ஆயிரத்து 16 மெகா வாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. சென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 ஆயிரத்து 749 நவீன டிரான்ஸ்பார்மர் (ஆர்.எம்.யூ. கருவிகள்) பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை தவிர, 3 ஆயிரத்து 447 மின்மாற்றிகள் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன், 13 துணை மின்சார நிலையங்களும் அமைக்கப்பட்டு கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு உள்ளன.

சென்னையில் கேபிள்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. அதிகரித்து வரும் மின்சார தேவையை வினியோகம் செய்யும் அளவுக்கு தற்போது அவற்றின் திறன் குறைவாக உள்ளது. எனவே புதிய கேபிள்கள் அமைக்க வேண்டி உள்ளது. இப்புதிய கேபிள்கள் எந்தெந்த இடங்களில் அமைக்க வேண்டும் என்பது குறித்து ஒரு வாரத்துக்குள் கருத்துரு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே, சென்னையைப் பொறுத்தவரை வரும் ஆண்டுகளில் மின்சார தேவை அதிகரித்தாலும் கூட எவ்வித தடையும் இல்லாமல் சீரான மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த ஆண்டுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய 3 மாதத்துக்கான மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இந்த கோடை காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிக்க மின்சார வாரியம் தயார் நிலையில் உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டுக்கான மின்சாரத்தின் தேவையை பூர்த்தி செய்ய வடசென்னை அனல்மின் நிலையத்தின் நிலை-3 ல் உற்பத்தி தொடங்கப்பட்டு மின்சார தேவை பூர்த்தி செய்யப்படும். சென்னையில் இரவு நேரங்களில் சீரான மின்வினியோகம் செய்வதற்காக 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சென்னையில் மின்சார வினியோகத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் செயற்பொறியாளர்களை நேரில் சென்று சரி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.


Next Story