கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!


கோவை நகைக்கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது..!
x

கோவையில் பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4 கிலோ 600 கிராம் நகை கொள்ளை போனது.

கோவை,

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த 28-ந் தேதி 4 கிலோ 600 கிராம் நகை கொள்ளை போனது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த விஜய் (வயது 25) என்பவர் முகமூடி அணிந்து அந்த கடைக்குள் புகுந்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தலைமறைவான விஜய்யை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சந்தீஷ் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையன் விஜய்யை தேடி வந்தனர்.

இதற்கிடையில், இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த 30-ம் தேதி விஜய்யின் மனைவி நர்மதாவை போலீசார் கைது செய்தனர். அத்துடன் விஜய் கொள்ளையடித்த நகையை குப்பை மற்றும் சாலையோரம் புதைத்து வைத்த விஜய்யின் மாமியார் யோகராணியும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து மொத்தம் 4 கிலோ 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

தலைமறைவாகி இருந்த விஜய்யை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து காளகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜய்யை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 300 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விஜய்யிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story