கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கத்திமுனையில் மிரட்டல்: வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது


கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கத்திமுனையில் மிரட்டல்: வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது
x

கடனை திருப்பி கேட்ட பெண்ணை கத்திமுனையில் மிரட்டிய வாலிபர் வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை

சென்னை தியாகராயநகர், அபிபுல்லா சாலையை சேர்ந்தவர் லட்சுமி (வயது 40). இவர் பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எனது தாயார் எங்கள் பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்திருந்தார், அதில் ரூ.1 லட்சத்தை சுப்பிரமணி திருப்பி கொடுத்துவிட்டார். மீதி ரூ.1 லட்சத்தை திருப்பித்தராமல் சுப்பிரமணி இழுத்தடித்து வந்தார். அந்த பணத்தை தருமாறு நான் கேட்டேன். இதற்கு சுப்பிரமணியின் மகன் விக்னேஷ் (29) எங்கள் வீடு தேடி வந்து கத்தியை காட்டி மிரட்டினார். பணத்தை கேட்டால் தொலைத்து விடுவேன் என்று எனது சேலையை பிடித்து இழுத்தும் பயமுறுத்தி விட்டு சென்றுள்ளார். அவரால் எனக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகார் மனு தொடர்பாக பாண்டி பஜார் போலீசார், பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விக்னேஷ் கைது செய்யப்பட்டார்.


Next Story