திருப்பூர்: அரசு பஸ் மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி


திருப்பூர்: அரசு பஸ் மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி
x

திருப்பூரில் அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர்,

திருப்பூர் நல்லிக்கவுண்டன் நகர், புது நகர், 7 ஆவது தெருவைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவரது குடும்பத்தினர் 6 பேர் அவர்களது காரில் திருக்கடையூர் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். காரை அவரது இளைய மகன் இளவரசன்(26) ஓட்டினார். அப்போது வெள்ளக்கோவில் காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே எதிரில், திருப்பூரிலிருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக கார் நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் இருந்த சந்திரசேகரன் (60), இவருடைய மனைவி சித்ரா (57), இவர்களுடைய இளைய மகன் இளவரசன் (26), மூத்த மகன் சசிதரனின் மனைவி அருவிவித்ரா (30), சசிதரனின் மூன்று மாத பெண் குழந்தை சாஷி ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சசிதரன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பணிமனையைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவரான கரூர் மாவட்டம் மாணிக்காபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன் (51) மீது வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் நொய்யல் பழனிசாமி (53) என்பவர் அரசு பஸ்சின் கண்டக்டர் ஆவார். சம்பவ இடத்தை காங்கயம் டி.எஸ்.பி. பார்த்திபன், வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். ஞானப்பிரகாசம் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story