#லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா


#லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 31 May 2022 9:29 PM GMT (Updated: 2 Jun 2022 12:08 AM GMT)

கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது.


Live Updates

  • 2 Jun 2022 12:08 AM GMT


    ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்புகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.

    இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஆண்ட்ரி யெர்மக், கூட்டாளிகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

  • 1 Jun 2022 11:50 PM GMT

    உக்ரைனுக்கு பக்கபலம்

    அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி ரஷியா போரை தொடங்கியது.

    நாளையுடன் 100-வது நாளை எட்டும் இந்த போர் உக்ரைனின் பல நகரங்களை சின்னாபின்னமாக்கி உள்ளது. பல ஆயிரம் மக்களை பலிகொண்டதோடு, லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக்கி உள்ளது. எனினும் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு வருகிறது.

    இந்த போரில் அமெரிக்காவும், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளும் உக்ரைனுக்கு பெரும் பக்கபலமாக இருந்து வருகின்றன.

  • 1 Jun 2022 4:16 PM GMT

    கிழக்கு உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் ஒரு நாளைக்கு 60 முதல் 100 வீரர்களை இழந்து வருவதாகவும் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, இதன்காரணமாக நாங்கள் தற்காப்பு எல்லைகளை வைத்திருக்கிறோம் எனவும் விளக்கம் அளித்தார்.

  • உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்குவோம்: மேற்கத்திய நாடுகள்
    1 Jun 2022 12:18 PM GMT

    உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்குவோம்: மேற்கத்திய நாடுகள்

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 100 நாட்கள் ஆகிவிட்டது. உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியா, கிழக்கு நகரங்களை கைப்பற்றும் முனைப்பில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் படை வலிமையை மேலும் அதிகரிக்கும் வகையில், கூடுதல் ஆயுதங்களை அந்நாட்டுக்கு வழங்க இருப்பதாக மேற்கத்திய நாடுகள் தெரிவித்துள்ளன.

    உக்ரைனுக்கு ரேடார் அமைப்புகள் மற்றும் ஏவுகணை தடுப்பு நவீன ஆயுதங்களை வழங்க இருப்பதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. அதேபோல், அதி நவீன மற்றும் நடுத்தர ரக ராக்கெட் அமைப்புகள் ஆகியவை அடங்கிய தொகுப்புகளை அமெரிக்கா இன்று அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, எரிகிற தீயில் எரிபொருளை ஊற்றும் செயலை அமெரிக்கா செய்வதாக சாடியுள்ளது.

  • உக்ரைனின் செவரோடொனட்ஸ்க்  ரசாயன ஆலை மீது ரஷியா தாக்குதல்...!
    1 Jun 2022 9:35 AM GMT

    உக்ரைனின் செவரோடொனட்ஸ்க் ரசாயன ஆலை மீது ரஷியா தாக்குதல்...!

    உக்ரைன் நாட்டின் செவரோ-டொனெட்ஸ்க் நகரில் உள்ள ரசாயன ஆலை மீது ரஷிய படைகள் வான் தாக்குதல் நிகழ்த்தியதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டனர்.

    உக்ரைனின் தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ-டொனெட்ஸ்க் நகரின் பெரும்பகுதி ரஷிய படைகள் வசம் சென்றது. அங்குள்ள ரசாயன ஆலை மீது ரஷிய படைகள் நிகழ்த்திய தாக்குதலில் நைட்ரிக் அமிலம் நிரப்பப்பட்டிருந்த கொள்கலன் வெடித்து சிதறியது.

    நைட்ரிக் அமிலம் கலந்த வாயுவை சுவாசிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் மக்கள் பேக்கிங் சோடா கலந்த நீரில் துணிகளை முக்கி, காயவைத்து அவற்றை முகக்கவசங்களாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • 1 Jun 2022 12:30 AM GMT


    போர் தொடங்கிய முதல் நாளில் கார்கிவ் நகரில் குடியிருப்பு கட்டிடங்கள் மீது பீரங்கி குண்டுகளை வீசி அப்பாவி மக்களை கொன்றதாக ரஷிய வீரர்கள் அலெக்சாண்டர் பாபிகின் மற்றும் அலெக்சாண்டர் இவனோவ் ஆகிய இருவர் மீது போர் குற்றம் சுமத்தி உக்ரைன் கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அவர்கள் இருவரும் நேற்று குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களின் தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

    முன்னதாக போர் குற்றத்தில் ஈடுபட்டதாக 21 வயதான ரஷிய ராணுவ வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உக்ரைன் கோர்ட்டு கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.

  • 1 Jun 2022 12:09 AM GMT



    கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தின் ஸ்லோவியன்ஸ்க் நகரில் ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 6 பேர் படுகாயம் அடைந்ததாகவும் மாகாண கவர்னர் பால் கிரிலென்கோ தெரிவித்துள்ளார்.

  • 31 May 2022 10:44 PM GMT


    கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷிய படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்த நிலையில் கிழக்கு உக்ரைனின் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    லுஹான்ஸ்க் மாகாணத்தில் ரஷிய படைகளின் தாக்குதலை எதிர்கொண்டு வரும் ஒரு நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடம்தேடி பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ்சில் பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளரான லெக்லெர்க் இம்ஹாப் (வயது 32) என்பவரும் பயணித்தார். அப்போது அந்த பஸ் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் லெக்லெர்க் இம்ஹாப் கொல்லப்பட்டார். அவருடன் பயணம் செய்த மற்றொரு பிரான்ஸ் பத்திரிகையாளர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    போர் குற்ற விசாரணை

    இது குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கூறுகையில், “போரின் யதார்த்தத்தை உலகுக்கு சொல்ல பிரான்ஸ் பத்திரிகையாளர் லெக்லெர்க் இம்ஹாப் களத்தில் பணியாற்றி வந்தார். அவர் மனிதாபிமான வழித்தடத்தில் பயணித்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களின் துக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

    இதனிடையே உக்ரைன் போரில் பிரான்ஸ் பத்திரிகையாளர் கொல்லப்பட்டது தொடர்பாக போர் குற்ற விசாரணையைத் தொடங்குவதாக பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

  • 31 May 2022 9:47 PM GMT


    ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரைக் தெரிவித்துள்ளார்.

    24 மணி நேரமும் நடந்து வரும் குண்டு வீச்சுக்கு மத்தியில் நகரில் சுமார் 13 ஆயிரம் பேர் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருப்பதாக ஒலெக்சாண்டர் வேதனையுடன் கூறினார்.

    அவர்கள் நகரை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதற்கான சூழல் இல்லை என்றும், தெருக்களில் கடுமையான சண்டை நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் ரஷிய படைகளின் தாக்குதல்களால் அந்த நகரில் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டு மக்கள் தவிப்புக்கு ஆளாகி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story