இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து பரபரப்பு தகவல்


இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை குறித்து பரபரப்பு தகவல்
x

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 47வது நாளாக நீடித்து வருகிறது.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து சுமார் 250 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இதில், சிலரை ஹமாஸ் விடுதலை செய்த நிலையில் இன்னும் 240 பேர் பிணைக்கைதிகளாக காசாவில் உள்ளனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இதனிடையே, போர் இன்று 47 வது நாளாக நீடித்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 14 ஆயிரத்து 100 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றவர்களை மீட்க இஸ்ரேல் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் பிணைக்கைதிகளை விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், போரை நிறுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், பேச்சுவார்த்தையின் பயனாக இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் இஸ்ரேல் - ஹமாஸ் போரை தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன.

அதன்படி, நாளை காலை 10 மணி முதல் 4 நாட்களுக்கு போர் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் பலனாக தங்கள் வசம் உள்ள 240 பிணைக்கைதிகளில் முதற்கட்டமாக 50 பேரை விடுதலை செய்ய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பிடியில் உள்ள பிணைக்கைதிகளில் முதற்கட்டமாக 50 பேர் விடுதலை செய்யப்படுவதற்கு ஈடாக தங்கள் நாட்டின் சிறையில் உள்ள 150 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், கூடுதலாக 10 பிணைக்கைதிகளை விடுதலை செய்தால் ஒருநாள் கூடுதலாக போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும், போர் நிறுத்தத்தின்போது எகிப்தில் இருந்து ரபா எல்லை வழியாக காசாவுக்குள் எரிபொருள், நிவாரண உதவிப்பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த காலத்தில் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர், விமானப்படையினர் காசாவில் தாக்குதல் நடத்தமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினரும் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தமாட்டோம் என தெரிவித்துள்ளது.

அதேவேளை, இது தற்காலிக போர் நிறுத்தம்தான் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'தற்காலிக போர் நிறுத்தம், ராணுவம் தொடர்ந்து சண்டையிட தயாராவதற்கான கால அவகாசத்தை வழங்கும்' என்றார்.


Next Story