32-வது நாளாக நீடிக்கும் போர்: காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது


32-வது நாளாக நீடிக்கும் போர்: காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 6 Nov 2023 10:06 PM GMT (Updated: 7 Nov 2023 10:44 AM GMT)

போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தரை, கடல், வான் என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசா,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி பயங்கர தாக்குதலை நடத்தி, 1,400 பேரை கொன்று குவித்ததுடன் வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட முந்தைய போர்களை விடவும் மிகவும் மோசமானதாக மாறிவரும் இந்த போர் இன்று 32-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் இருதரப்பிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிகை நேற்று 10 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் காசாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஆவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காசாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்கக்கோரும் ஐ.நா. மற்றும் அரபு நாடுகளின் அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை காசாவில் இருந்து துடைத்தெறியும் வரை போரை நிறுத்தபோவதில்லை என்பதில் இஸ்ரேல் திட்டவட்டமாக உள்ளது.

தற்போது இஸ்ரேலிய ராணுவம் காசா நகரின் கரை ஓரங்களில் ஹமாஸ் போராளிகளுடன் நேருக்கு நேர் போரில் ஈடுபட்டுள்ளது, இரு தரப்புக்கும் கடுமையான ஆபத்துகளுடன் கூடிய போர் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. .


Next Story