23வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை


தினத்தந்தி 28 Oct 2023 8:15 PM GMT (Updated: 29 Oct 2023 9:45 AM GMT)

காசாவில் இருந்து கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

ஜெருசலேம்,

Live Updates

  • 29 Oct 2023 7:52 AM GMT

    ஹமாஸ் ஆயுதக்குழுவின் 450 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் - இஸ்ரேல் ராணுவம் தகவல்

    கடந்த 24 மணி நேரத்தில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் 450 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. 

  • 29 Oct 2023 4:10 AM GMT

    பலி எண்ணிக்கை:

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 7 ஆயிரத்து 703 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது.

  • 29 Oct 2023 3:18 AM GMT

    காசாவில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த தொலைத்தொடர்பு சேவைகள்

    இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 23வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதலில் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.

    இணையதளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டன. இதனால், காசாவில் உள்ள மக்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

    இந்நிலையில், காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

  • 29 Oct 2023 2:55 AM GMT

    23வது நாளாக தொடரும் போர்:

    இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 23வது நாளாக நீடித்து வருகிறது.

  • 28 Oct 2023 11:31 PM GMT

    போரில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டி உள்ளது - ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல்

    அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலுடனான போர் தொடங்கியதில் இருந்து 8,000க்கும் அதிகமானோர் பாலஸ்தீனப் பகுதியில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆளும் காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் இன்று அதிகாலை தெரிவித்தது.

    இதன்படி இஸ்ரேல் தாக்குதல் காரணமாக காசாவில் இறப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்துள்ளது என்றும், அவர்களில் பாதி குழந்தைகள் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக நேற்று அதிகாலை வெளியிடப்பட்ட கடைசி உயிரிழப்பு எண்ணிக்கையில் 7,703 ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

  • 28 Oct 2023 9:15 PM GMT

    இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளது: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

    ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 23-வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதனால் போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. போரில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    இதனிடையே போரில் அப்பாவி பொதுமக்கள், குறிப்பாக பெண்களும், சிறுவர்களும் அதிகளவில் பாதிக்கப்படுவதால் போரை உடனடியாக நிறுத்த வேண்டுமென ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் நிறுத்தத்துக்கான அழைப்பை இஸ்ரேல் தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

    இந்த நிலையில் ஹமாஸ் குழுவிற்கு எதிரான இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் எதிரிகளை தோற்கடிப்பதும் நமது இருப்புக்கு உத்தரவாதம் அளிப்பதும் எங்களுக்கு ஒரு முக்கிய குறிக்கோள்” என்று அவர் கூறினார்.

  • 28 Oct 2023 8:31 PM GMT

    காசா போர் 'நீண்ட மற்றும் கடினமானதாக' இருக்கும் - இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு

    மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த 7-ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் தெற்கு நகரங்கள் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசி தாக்கினர். சுமார் 20 நிமிடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேல் நகரங்களை தாக்கின.

    அதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் எல்லையோர நகரங்களுக்குள் ஊடுருவினர். அவர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றனர்.

    அதோடு நிற்காமல் பெண்கள், சிறுவர்கள் என 220-க்கும் அதிகமானோரை சிறைபிடித்து, காசா பகுதிக்கு கொண்டு சென்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய இந்த கொடூர தாக்கு தலில் இஸ்ரேல் நிலைகுலைந்தது.

    இந்நிலையில் காசாவில் தரைவழித் தாக்குதல் முடுக்கிவிடப்படுவதால் போர் நீண்டதாகவும் கடினமாகவும் இருக்கும் என பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக டெல் அவிவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நெதன்யாகு, “காசா மீதான போர் "நீண்ட மற்றும் கடினமானதாக" இருக்கும். இஸ்ரேல் தனது தாக்குதலை மையமாக வைத்துள்ள வடக்கு காசா பகுதியை பாலஸ்தீனிய குடிமக்கள் காலி செய்யவேண்டும் . ஹமாஸ் பிடியில் உள்ள 200க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போரின் இரண்டாவது கட்டமாகும், அதன் இலக்குகள் தெளிவாக உள்ளன. ஹமாஸின் ஆட்சி, இராணுவ திறன்களை அழிப்பது மற்றும் பணயக்கைதிகளை வீட்டிற்கு கொண்டு வருவது” என்று அவர் கூறினார்.


Next Story