'நம்மை எதுவும் தடுக்கமுடியாது' - காசாவில் பாதுகாப்புப்படையினர் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு


நம்மை எதுவும் தடுக்கமுடியாது - காசாவில் பாதுகாப்புப்படையினர் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு
x

இந்த போரில் நமக்கு 3 இலக்குகள் உள்ளன என்று காசாவில் பாதுகாப்புப்படையினர் மத்தியில் இஸ்ரேல் பிரதமர் பேசினார்.

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 237 பேரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 14 ஆயிரத்து 854 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரின்போது மேற்குகரை பகுதியிலும் வன்முறை வெடித்தது. இந்த மோதலில் மேற்குகரையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா, எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சித்தன. முயற்சியின் பலனாக கடந்த 24ம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 4 நாட்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

மேலும், பிணைக்கைதிகள் விடுதலையிலும் இரு தரப்பிலும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி, தங்கள் வசம் பிணைக்கைதிகளாக இருந்த வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் என இதுவரை 58 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது. இதற்கு மாறாக தங்கள் நாட்டின் சிறையில் இருந்து இதுவரை 78 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவுக்கு வருகிறது. இதனால், நாளை முதல் காசாமுனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, தினமும் 10 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தால் ஒரு நாள் தற்காலிகமாக போர் நிறுத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால், தற்காலிக நிறுத்தத்தை நீட்டிக்க கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று காசா முனைக்கு சென்றார். அங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேல் படையினரை அவர் சந்தித்தார். வீரர்கள் மத்தியில் பேசிய நெதன்யாகு, நம்மை எதுவும் தடுக்கமுடியாது. போரின் அனைத்து இலக்குகளையும் அடைவதில் வலிமை, சக்தி, விருப்பம், உறுதிப்பாடு நம்மிடம் உள்ளது என்பதில் உறுதியாக உள்ளோம். அதைதான் நாம் செய்கிறோம்.

இந்த போரில் நமக்கு 3 இலக்குகள் உள்ளன. ஹமாசை ஒழிப்பது, பிணைக்கைதிகளை மீட்பது மற்றும் இஸ்ரேலுக்கு இனி காசா ஒரு ஆபத்தாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும்' என்றார்.


Next Story