பாகிஸ்தான்: ராணுவ வீரர்கள் நடத்திய வேட்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் பலி


பாகிஸ்தான்:  ராணுவ வீரர்கள் நடத்திய வேட்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் பலி
x

பாகிஸ்தானில் அரசுடனான பயங்கரவாதிகளின் ஒப்பந்தம், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் காலாவதியான சூழலில், நாடு முழுவதும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என ராணுவ வீரர்களுக்கு உளவு தகவல் வந்து சேர்ந்தது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சூடு சண்டை நடந்தது.

இந்த தீவிர மோதலில் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுடைய பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன. வடக்கு வசீரிஸ்தான் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் பலரை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் இந்த பயங்கரவாதிகள் என படையினர் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கைபர் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

அரசுடனான பயங்கரவாதிகளின் ஒப்பந்தம், கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் காலாவதியான சூழலில், நாடு முழுவதும் பயங்கரவாத செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனை தொடர்ந்தே பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story