பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?; கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் - போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு


பாகிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?; கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரம் - போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு
x

பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி அரசு அமைக்க பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லாகூர்,

பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன. பெண்கள், சிறுபான்மையினருக்கான தொகுதிகளுக்கான தேர்தல் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் நடத்தப்படும். ஆகையால், மீதமுள்ள 266 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. ஒருதொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு எஞ்சிய 265 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. ஆட்சியமைக்க 134 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

இந்த தேர்தலில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நிலையில் அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இதனால், இம்ரான்கானின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி உடனடியாக தொடங்கியது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால் வாக்குகளை எண்ணும் பணி தாமதம் ஆவதாகவும், தகவல் தொடர்பு முடக்கம் காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2 நாட்களாக எண்ணப்பட்டு வந்தன.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 264 தொகுதிகளில் நடந்த தேர்தலில் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி ஆதரவுபெற்ற சுயேச்சைகள் 101 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். ஆனாலும், பெரும்பான்மையை அடைய முடியவில்லை.

அதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்ற நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி 75 தொகுதிகளிலும், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 தொகுதிகளிலும், கராச்சியை மையமாக கொண்ட முத்ஹிடா குவாமி முன்னணி பாகிஸ்தான் கட்சி 17 தொகுதிகளிலும், பிற சிறிய கட்சிகள் 12 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

நவாஸ் ஷெரீப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி, முத்ஹிடா குவாமி முன்னணி பாகிஸ்தான் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல், பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியுடனும் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அரசியல் குழப்பம் நீடித்துவரும் நிலையில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் முறைகேடு நடக்காவிட்டால் தங்கள் ஆதரவுபெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் கூடுதல் இடங்களில் வென்றிருப்பார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார். மேலும், நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

போராட்டம் நடத்த இம்ரான்கானும் அவரது கட்சியும் அழைப்பு விடுத்துள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக கூட போலீசார் தடைவிதித்துள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.


Next Story