8 பேரின் மரண தண்டனை.. இந்தியாவின் அப்பீல் மனுவை ஏற்றது கத்தார் நீதிமன்றம்


8 பேரின் மரண தண்டனை.. இந்தியாவின் அப்பீல் மனுவை ஏற்றது கத்தார் நீதிமன்றம்
x

கத்தார் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கடந்த மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தோகா:

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் பணியாற்றி வந்தனர். அவர்கள் 8 பேரும் கத்தாரில் உளவு பார்த்ததாக கூறி, அந்நாட்டு அதிகாரிகள் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்களின் ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டன. வழக்கு விசாரணையின் முடிவில் இந்தியர்கள் 8 பேருக்கும் கத்தார் கோர்ட்டு கடந்த மாதம் மரண தண்டனை விதித்தது. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும், 8 பேரையும் இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அரசு கூறியிருந்தது.

அதன்படி தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு சார்பில் கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்பீல் மனுவை ஆய்வு செய்து அதன்பின்னர் விசாரணை எப்போது நடைபெறும் என்பதை நீதிமன்றம் அறிவிக்கும்.


Next Story