30-வது நாளை எட்டிய போர்: காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடரும் தாக்குதல்


30-வது நாளை எட்டிய போர்: காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தொடரும் தாக்குதல்
x

Image Courtacy: AFP

தினத்தந்தி 4 Nov 2023 11:17 PM GMT (Updated: 5 Nov 2023 5:37 AM GMT)

பூமியின் நரகம் என்று கூறும் அளவுக்கு காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

காசா,

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வரும் போர் இன்று 30-வது நாளை எட்டியுள்ளது.

இஸ்ரேலின் இந்த போர் காசா இதுவரை சந்தித்திராத அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருவதால் போரை நிறுத்தக்கோரி ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்து வரும் இஸ்ரேல் ஹமாசை ஒட்டு மொத்தமாக ஒழிக்கும் இறுதி இலக்கை எட்டும் வரை போர் தொடரும் என கூறி வருகிறது.

அதற்கு ஏற்றாற்போல் தரை, கடல், வான் என 3 வழிகளில் இருந்தும் காசாவை இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது. இந்த மும்முனை தாக்குதலில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. பூமியின் நரகம் என்று கூறும் அளவுக்கு காசாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

எகிப்தின் உதவியுடன் காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் அனுப்பப்பட்டு வந்தாலும், அது அங்கு உதவிக்காக ஏங்கி தவித்து வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு வழங்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை.

காசாவில் அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொது உள்கட்டமைப்புகள் மீது வான்தாக்குதல் நடத்தப்படுவது தொடர் கதையாகி உள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்தே இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் கூறி வருகிறது.

இந்த நிலையில் ஜபாலியா அகதிகள் முகாமில் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. இதில் 15 பேர் பலியாகினர். 54 பேர் படுகாயம் அடைந்தனர். போரின்போது மக்கள் வசிக்கும் பகுதி, பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. ஆனால், தொடக்கம் முதலே இஸ்ரேல் போர் நெறிமுறைகளை மீறி தாக்குதல் நடத்தி வருவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


Next Story