ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசு தொகை அறிவிப்பு...!!


ஆசிய ஆண்கள் 5 பேர் ஆக்கி: பட்டம் வென்ற இந்திய அணியினருக்கு பரிசு தொகை அறிவிப்பு...!!
x

image courtesy; twitter/@TheHockeyIndia

தினத்தந்தி 3 Sep 2023 2:39 AM GMT (Updated: 3 Sep 2023 5:21 AM GMT)

இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

சலாலா,

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் உலகக் கோப்பை 5 பேர் ஆக்கி போட்டிக்குரிய தகுதி சுற்றான ஆசிய மண்டல 5 பேர் ஆக்கி போட்டி ஓமன் நாட்டில் உள்ள சலாலா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டம் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்திய அணியில் ஜூக்ராஜ் சிங் (7-வது நிமிடம்), மனிந்தர் சிங் (10-வது நிமிடம்) தலா ஒரு கோலும், முகமது ரஹீல் (19-வது, 26-வது நிமிடம்) 2 கோலும் போட்டனர். பாகிஸ்தான் அணி தரப்பில் அப்துல் ரகுமான் (5-வது நிமிடம்), கேப்டன் அப்துல் ராணா (13-வது நிமிடம்), ஜிக்ரியா ஹயாத் (14-வது நிமிடம்), அர்ஷத் லிகாத் (19-வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்தனர்.

சமநிலையை தொடர்ந்து வெற்றியை முடிவு செய்ய பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அத்துடன் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் (4-5) கண்டு இருந்த தோல்விக்கும் பழிதீர்த்தது. இந்த போட்டியில் முறையே முதல் 3 இடங்களை பெற்ற இந்தியா, பாகிஸ்தான், மலேசியா அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.

முன்னதாக நடைபெற்ற பெண்கள் தகுதி சுற்று போட்டியிலும் இந்திய அணியே சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ஆசிய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஆக்கி அணி வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பயிற்சியாளர் உள்ளிட்ட உதவி ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.


Next Story