வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு பாராட்டு விழா


வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு பாராட்டு விழா
x
தினத்தந்தி 13 Oct 2018 4:15 AM IST (Updated: 13 Oct 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதற்காக, தமிழக அரசுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

சென்னை,

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் என்.ராமச்சந்திரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சுதந்திர தின விழாவின் போது தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார். இது தமிழக விளையாட்டு வீரர்-வீராங்கனைகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். சில வடமாநிலங்களில் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தேசிய, ஆசிய, காமன்வெல்த் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருப்பது இதுவே முதல்முறையாகும்.

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. இந்த விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 16-ந் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். அனைத்து விளையாட்டு சங்கங்களிடம் நிதி திரட்டி இந்த விழா நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் பெர்னாண்டோ, சீனியர் துணைத்தலைவர் ஐசரி கணேஷ், இணைசெயலாளர் சரவணன், அசோசியேட் துணைத்தலைவர் அசோக் தாக்கர், செயற்குழு உறுப்பினர் செந்தில் தியாகராஜன், தமிழ்நாடு கூடைப்பந்து சங்க தலைவர் ராஜ் சத்யன், தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் கஸ்தூரி ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

1 More update

Next Story