ஆண்டுதோறும் அரசு வேலைவாய்ப்பு


ஆண்டுதோறும் அரசு வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 8 Dec 2023 8:00 PM GMT (Updated: 8 Dec 2023 8:00 PM GMT)

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்தான் அனைத்து பணிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்வு நடந்து வருகிறது.

படிப்பை முடித்தவர்கள் அனைவரும் உடனடியாக வேலைக்கு செல்லவேண்டும் என்ற ஆசையில் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பார்கள். அவர்களின் முதல் தேர்வு அரசு வேலையாகத்தான் இருக்கும். ஏனெனில் அரைக்காசு உத்தியோகம் என்றாலும், அரசு உத்தியோகம் என்ற மனப்பாங்கு காலம் காலமாக இருக்கிறது. அரசு உத்தியோகம் என்றால் நல்ல சம்பளம், ஆண்டுக்கு ஒருமுறை தவறாமல் சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு, காலமுறை பதவி உயர்வு, வாரம் இருநாள் விடுமுறை, ஆண்டுக்கு குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை, ஓய்வுகால பயன்கள் என்று பல சலுகைகள் இருப்பதால் படித்து முடித்தவர்கள் அனைவருக்கும் மத்திய-மாநில அரசு பணிகளில் சேரவேண்டும் என்பதே லட்சியமாக இருக்கிறது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம்தான் அனைத்து பணிகளுக்கும் ஆண்டுதோறும் தேர்வு நடந்து வருகிறது. மாவட்ட துணைகலெக்டர், துணை போலீஸ்சூப்பிரண்டு, மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் போன்ற குரூப்-1 தேர்வு, சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் போன்ற பணிகளை உள்ளடக்கிய குரூப்-2, குரூப் -2ஏ, மற்றும் குரூப்-3, குரூப்-4 போன்ற பணிகளுக்காக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகளும் வழங்கப்படுகின்றன.

எந்தெந்த பணிகளில் எவ்வளவு காலியிடங்கள் இருக்கின்றன? அதற்கான தேர்வுகள் எப்போது நடக்கும்? தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்பதை தெரிவிக்கும் வருடாந்திர தேர்வு அட்டவணை ஆண்டுதோறும் வெளியிடப்படும். படிக்கும்போது இறுதித்தேர்வு எழுதி முடிவுகளை எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு இணையான எதிர்பார்ப்பு, படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்த வருடாந்திர தேர்வு அட்டவணை எப்போது வரும்? என்று பார்ப்பதில் இருக்கும்.

இதை எதிர்பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் அதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள தீவிரமாக படித்து வருவார்கள். ஆனால் இந்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையும் இன்னும் வெளியிடப்படவில்லை, இந்த ஆண்டுக்கான காலியிடங்களுக்கான தேர்வும் இதுவரை நடக்கவில்லை. 15.12.2022 அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான ஆண்டு திட்டத்தை வெளியிட்டதில், 1,754 குரூப்-4 பணியிடங்களுக்கான விவரங்கள் மட்டும் வெளியிடப்பட்டதே தவிர, அறிவிக்கை இன்னும் வரவில்லை. குரூப்-1, குரூப்-2, 2ஏ போன்ற தேர்வுகளுக்கான நடைமுறை எதையும் நடத்தாதது, இளைஞர்களுக்கு பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு அனைத்து பணிகளுக்கும் இப்படி காலதாமதம் ஏற்பட்டதற்கு காரணமாக, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தலைவர் பதவி காலியாக இருப்பது, 14 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 உறுப்பினர்களே உள்ளது போன்றவை சொல்லப்படுகிறது. செயலாளர் பதவிக்கும் இப்போதுதான் நியமனம் நடந்துள்ளது. இதனால் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு இல்லாமலும் இருக்கிறது. இனி தேர்வு அட்டவணை வெளியிட்டாலும், அடுத்த ஆண்டு நடக்கப்போகும் தேர்வுகளுக்கான அட்டவணையாகத்தான் இருக்கும்.

இளைஞர்களின் முயற்சி ஒருபக்கம் இருந்தாலும், அவர்கள் வயதும் ஒரு ஆண்டு கடந்துவிடும். விளிம்பு வயதில் இருப்பவர்களுக்கு தேர்வு எழுதும் தகுதிக்கான வாய்ப்பு காலாவதியாகிவிடும். எனவே ஆண்டுதோறும் இந்த வருடாந்திர அட்டவணையை தவறாமல் வெளியிட்டு அந்தந்த ஆண்டிலேயே அனைத்து பணிகளுக்கும் தேர்வுநடத்த வேண்டும், வேலைவாய்ப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கையாக இருக்கிறது.


Next Story