ராணுவ பணியில் சென்னையில் தயாரிக்கப்படும் டிரோன்கள்!


ராணுவ பணியில் சென்னையில் தயாரிக்கப்படும் டிரோன்கள்!
x

நவீன தொழில்நுட்பத்தில், ஆளில்லா குட்டி விமானங்கள் என்று அழைக்கப்படும் டிரோன்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.

நவீன தொழில்நுட்பத்தில், ஆளில்லா குட்டி விமானங்கள் என்று அழைக்கப்படும் டிரோன்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. தமிழக அரசு இதற்காக டிரோன் கழகம் அமைத்து, பல்வேறு பணிகளை மேற்கொள்கிறது. டிரோன்களை எவ்வாறு இயக்குவது? என்ற பயிற்சியையும், இளைஞர்களுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் டிரோன்களின் பயன்பாடு விவசாயம் உள்பட அனைத்து துறைகளிலும் வர இருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள எம்.ஐ.டி., அதாவது மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்று கூறப்படும் என்ஜினீயரிங் கல்லூரியில் உள்ள டாக்டர் கலாம் மேம்பட்ட ஆளில்லா விமான ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்த தொழில்நுட்பத்தின் மூலம் 'தக்ஷா டிரோன்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட டிரோன்களின் சேவையை இந்திய ராணுவம் பயன்படுத்தப்போகிறது. எம்.ஐ.டி.யின் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரும், இயக்குனருமான கே.செந்தில்குமார் மற்றும் குழுவினர் இந்த டிரோன்களை வடிவமைப்பதில் பெரும்பங்கு வகித்தனர்.

ராணுவ வீரர்கள் பனி படர்ந்த மலைப்பகுதிகளிலும், அடர்ந்த வனப்பகுதிகளிலும் எல்லைப்புறங்களில் பணியாற்றுகிறார்கள். இதுதவிர, எல்லைப்பகுதிகளில் ஆங்காங்கு கண்காணிப்பு நிலையங்களிலும் ஒருசில ராணுவ வீரர்கள் தன்னந்தனியாக நாட்டைக்காக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் உணவு, மருந்து மற்றும் அவசர காலங்களில் ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் போன்றவை ஹெலிகாப்டர்கள் அல்லது கழுதைகள் மூலமாகவே கொண்டு செல்லப்படுகிறது. இதற்கு மாற்றாக டிரோன்கள் மூலம் உயர்ந்த மலைப்பகுதிகளான லே, லடாக் மற்றும் அதிக வெப்பம் உள்ள பொக்ரைன் போன்ற பல பகுதிகளுக்கு எடுத்துச்செல்ல டிரோன்கள் சேவை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனைகளில் இதன் பணி எல்லோரும் ஆச்சரியப்படத்தக்க வகையில் வெற்றிகரமாக நடந்துமுடிந்த நிலையில், 400 டிரோன்களை வாங்க இந்திய ராணுவம் 'ஆர்டர்' கொடுத்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்த டிரோன்களின் சேவை எல்லைப்புறங்களில் பயன்பாட்டுக்குவரும்.

வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் எளிதாக அணுகமுடியாத பல இடங்களில் இந்த டிரோன்கள் பயன்படுத்தப்படும். எல்லை கண்காணிப்பு நிலையங்களுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்த டிரோன்கள் மூலம் கொண்டுசெல்ல முடியும். இந்த டிரோன்களின் எடை 90 கிலோவாகும். ஒரு கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய இந்த டிரோன்கள் 15 கிலோ முதல் 20 கிலோ வரை எடையுள்ள உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், 10 கிலோ மீட்டர் தூரம் வரை கொண்டு சென்று திரும்பமுடியும் என்று கூறினார், தக்ஷா டிரோன் நிறுவன தலைமை செயல் அதிகாரி என்.ராமநாதன். சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த இந்திய திபெத்திய எல்லை காவல்படையின் 62-வது ஆண்டுவிழாவில் கலந்துகொண்ட மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, இந்த டிரோன்களை வடிவமைத்து தயாரித்து கொண்டிருக்கும் சென்னை குழுவினரை பாராட்டினார்.

தமிழ்நாட்டின் பெயரை சொல்லும் வகையில், இந்த டிரோன்களை வடிவமைத்த சென்னை எம்.ஐ.டி. குழுவினர், இதை தயாரிக்கும் தக்ஷா டிரோன் நிறுவனத்தினர் மிகவும் பாராட்டுக்குரியவர்கள். அடுத்ததாக, உடல் உறுப்பு தானத்துக்காக உறுப்புகளையும், அரியவகை ரத்தம் மற்றும் ரத்த பிளாஸ்மா, அவசர தேவைக்கான மருந்துகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல பயன்படுத்துவது குறித்தும் மட்டுமல்லாமல், எல்லைப்புறங்களில் காயமடைந்த அல்லது உடல்நலக்குறைவான ராணுவவீரரை ஏற்றிக்கொண்டுவரும் ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்துவது குறித்தும் ஆராய்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிலும் வெற்றிகிட்டும் என்பதில் சந்தேகமேயில்லை


Next Story