மகிழ்வோடு போய்வா 2022 ; வளத்தை கொண்டு வா 2023


மகிழ்வோடு போய்வா 2022 ; வளத்தை கொண்டு வா 2023
x

வாழ்வாதாரத்தையே பெரிதும் பாதித்த கொடிய கொரோனாவின் ஆட்டம் முழுமையாக அடங்காவிட்டாலும், பெருமளவுக்கு கட்டிப்போடப்பட்டது இந்த ஆண்டுதான்.

இன்று நள்ளிரவில் புத்தாண்டு பிறக்கிறது. வழக்கமாக புத்தாண்டு பிறக்கும்போது பழைய ஆண்டை போ என்றும், புத்தாண்டை வா வா என்றும் சொல்வதுண்டு. ஆனால் 2022-ஐ அப்படி சொல்ல முடியாது.ஏனெனில் 2022 ஒன்றும் அப்படி மோசமான ஆண்டு இல்லை. ஓரளவுக்கு நல்ல ஆண்டு என்றே சொல்லலாம். 2020,2021-ம் ஆண்டில் அரசையும், மக்களையும் புரட்டிப்போட்டு, வாழ்வாதாரத்தையே பெரிதும் பாதித்த கொடிய கொரோனாவின் ஆட்டம் முழுமையாக அடங்காவிட்டாலும், பெருமளவுக்கு கட்டிப்போடப்பட்டது இந்த ஆண்டுதான்.

மாணவர்களை வழக்கம்போல பள்ளிக்கூடங்களுக்கும், கல்லூரிகளுக்கும் செல்ல வைத்ததும் இந்த ஆண்டுதான். சகஜ வாழ்க்கை அனைத்து பக்கமும் திரும்பியதும் 2022-ல் தான். பிரதமர் நரேந்திர மோடி பூரிப்போடு 96-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் சொன்னது போல, 2022-ம் ஆண்டின் பல்வேறு வெற்றிகளும் உலகம் முழுவதிலும் இந்தியாவுக்கென ஒரு சிறப்பான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. இந்த ஆண்டில்தான் உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா 5-ம் இடத்தைப் பெற்றது. மற்றொரு சிறப்பான உயர்வு என்னவென்றால் ஜி20 நாடுகளின் கூட்டமைப்பு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருக்கிறது.

தமிழக அரசை எடுத்துக்கொண்டால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை 'எங்களில் ஒருவன்' என்று மக்கள் போற்றி புகழும் வகையில் மக்களோடு இணைந்து பல சாதனைகளை படைத்துள்ளார். செஸ் ஒலிம்பியாட்டை சென்னையில் நடத்தி, அதில் கலந்துகொண்ட 187 நாடுகளின் நன்மதிப்பையும் பெற்றார். எல்லோரும் எல்லா வளங்களையும் பெற வேண்டும் என்ற நோக்கில், 'திராவிட மாடல் ஆட்சி' நடத்தி வரும் அவர் தமிழ்வழி கல்வி பயின்று கல்லூரிகளில் உயர்கல்விக்காக சேர்ந்த ஒரு லட்சத்து 60 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிலே சேர்க்கும் 'புதுமைப் பெண் திட்டம்', ஒருலட்சத்து 16 ஆயிரம் பள்ளிக்கூட மாணவர்களுக்கு 'இலவச காலை உணவு திட்டம்' என்று பல திட்டங்கள் மாணவ சமுதாயம் பயன்பெற இந்த ஆண்டில் நிறைவேற்றினார்.

விவசாயிகளுக்கு 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டன. தொழில்துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்படுத்தும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை 'மக்களைத்தேடி மருத்துவம்' திட்டத்தில் ஒரு கோடியே ஒன்றாவது பயனாளிக்கு திருச்சி மாவட்டத்தில் மருந்து பெட்டகம் என்பது உள்பட அனைத்து துறைகளிலும் எண்ணற்ற சாதனைகள் அரங்கேறின. எல்லாவற்றிலும் உச்ச சாதனை என்னவென்றால் இந்த ஒரு ஆண்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் 647 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ஒரு கோடியே 3 லட்சத்து 74 ஆயிரத்து 355 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியிருக்கிறார். இப்படி நன்மைகள் பல தந்த 2022 ஐ போலவே மக்களின் நல்வரவைப் பெற்று வரப்போகும் 2023-ம் ஆண்டும் அனைத்து துறைகளிலும், குறிப்பாக தமிழகத்தின் முன்னேற்றம் வெகு வேகமாக செல்லவேண்டும், தமிழக பட்ஜெட்டில் அந்த பாதையை நோக்கி பல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றும், மக்களின் வாழ்விலும் ஒரு புதிய மலர்ச்சி ஏற்படவேண்டும் என்பதும் சமுதாயத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.


Next Story