தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்


தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்
x

கத்தாரில் உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டி நடந்த நேரத்தில், இந்திய ரசிகர்கள் பெருமளவில் ரசித்தாலும் அவர்கள் உள்ளங்களில் ஒரு மனக்குறை இருந்தது. வெறும் 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட கத்தார் நாட்டில் இந்த போட்டி நடக்கிறது. இவ்வளவு அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இதுவரை இந்த போட்டி நடக்கவில்லை. இதுவரை இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்றதில்லை. இந்தியாவில் இத்தகைய போட்டிகள் நடந்திருந்தாலாவது போட்டி நடக்கும் நாடு என்ற முறையில் இந்தியாவுக்கு ஒரு அணியை அனுப்பி போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கும்.

இத்தகைய நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் இந்த ஆண்டு தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், திரிபுரா, மேகாலயா மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மேகாலயாவில் பேசிய நாள்தான், கத்தாரில் கால்பந்து உலகக் கோப்பைக்கான இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவும், பிரான்சும் மோதிய நாள்.

அந்த நாளில் பிரதமர் கால்பந்து போட்டி குறித்து தன் பேச்சில் குறிப்பிட்டார். ஷில்லாங்கில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, 'இந்திய மக்களின், குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்களின் நீண்டநாள் கனவு நிறைவேறப்போகிறது, என்ற வகையில் உரையாற்றினார். சீக்கிரத்தில் 'பிபா' உலக கோப்பைக்கான கால்பந்து போட்டி போல, ஒரு பெரிய உலகளாவிய போட்டி இந்தியாவில் நடக்கும். அப்போது இந்திய மக்கள் நமது தேசிய கொடியான மூவர்ண கொடியை கைகளில் ஏந்திக்கொண்டு பெருமகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்வார்கள்' என்றார்.

எந்த போட்டி இந்தியாவில் நடக்கப்போகிறது? என்று மக்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர், "2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் ஆமதாபாத்தில் நடத்த வருகிற செப்டம்பர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன முழு உறுப்பினர்கள் கூட்டத்தில் உரிமம் கோரப்படும்" என்று அறிவித்துள்ளார். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஒடிசாவில் நாளை (13-ந் தேதி) உலகக்கோப்பைக்கான ஆக்கி போட்டி தொடங்குகிறது. அக்டோபர்-நவம்பரில் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடக்கிறது. தமிழ்நாட்டிலும் இதுபோன்று நடத்த வேண்டும் என்று தமிழ்நெஞ்சங்களில் பெரிய ஏக்கம் இருக்கிறது.

தமிழ்நாட்டில், அதிலும் சென்னையில் எத்தகைய உலகளாவிய போட்டிகளையும் நடத்த முடியும். ஏற்கனவே இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் இருந்தபோது, தெற்காசிய விளையாட்டு போட்டி நடந்து இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டை கடந்த ஆண்டு திறம்பட நடத்தி காட்டியிருக்கிறார். சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டியும் வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. இப்போது சென்னையில் இருக்கும் உள்கட்டமைப்பு வசதிகளோடு இன்னும் கணிசமான தொகையை மத்திய அரசாங்கம் ஒதுக்கினால், உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிவிட முடியும். தேவையான எண்ணிக்கையில் நட்சத்திர ஓட்டல்கள் இருக்கின்றன. ஆற்றல்மிகு முதல்-அமைச்சர் இருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சராக துடிப்பு மிகுந்த, திறமை வாய்ந்த உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார். எனவே, எல்லா வசதிகளும் இருக்கும், அனைத்து வசதிகளையும் உருவாக்க வாய்ப்புள்ள தமிழ்நாட்டிலும் சர்வதேச போட்டிகளை நடத்த தமிழக அரசு கோரிக்கை விடவேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் இரு அவைகளிலும் இதை வலியுறுத்தவேண்டும்.


Next Story