இன்று நமது சாதனைகளை கொண்டாடும் நாள்: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி உரை
79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:-
இன்று நமது சாதனைகளை கொண்டாடும் நாள், 140 கோடி மக்களும் பெருமைப்படக் கூடிய திருவிழா. பல சவால்களை எதிர்கொண்டு, 1947ல் நமது நாடு சுதந்திரம் பெற்றது
இது பெருமை மற்றும் மகிழ்ச்சியால் நிரப்பப்பட்ட கூட்டு சாதனைகளின் தருணம். தேசம் ஒற்றுமையின் உணர்வைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது. 140 கோடி இந்தியர்கள் உற்சாகத்துடன் சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள்.
அரசமைப்பு சட்டம்தான் இந்தியாவுக்கு ஒளி காட்டும் விளக்கு. கடந்த 78 ஆண்டுகளாக அரசமைப்பு சட்டம் வழிகாட்டியாக இருக்கிறது
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
சுதந்திர தின விழா காலை 7.30 மணிக்கு தொடங்கியது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள்.
தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் ராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார்.
இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளித்தனர். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது.
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது.
கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி
சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை
சுதந்திர தினத்தை கொண்டாடுவதில் தேசத்தை வழிநடத்த பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டைக்கு வருகை தந்துள்ளார்.
"ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படுவதை ஒட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஜனநாயகத்தை திருட முடியாத, வாக்குகள் மதிக்கப்படும் தேசத்தை கட்டியெழுப்ப உறுதியேற்போம்
உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களைப் பாதுகாத்தல் என்பதாகும். இதன் பொருள் நமது சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும், இதன் மூலம் ஒவ்வொரு நபரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
79-வது சுதந்திர தின கொண்டாட்டம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்படுவதை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், ஒரு புதிய பாய்ச்சலான பாரதத்தை கட்டியெழுப்பவும் இன்னும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை, மத்திய போலீஸ் படை மற்றும் டெல்லி போலீசார் என 15,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றத்தை தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இவரது உரையை தொடர்ந்து தேசிய மாணவர் படை மாணவர்களும், ‘‘எனது இந்தியா’’ அமைப்பின் 2500 தன்னார்வலர்களும் சேர்ந்து தேசிய கீதம் பாடுகிறார்கள். தொடர்ந்து இந்த தன்னார்வலர்கள் புதிய பாரதத்துக்கான இலச்சினையை உருவாக்கும் நிகழ்வும் இடம்பெறுகிறது.
சிறப்புமிக்க இந்த விழாவில் பங்கேற்க ஊராட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுயஉதவிக்குழு பெண்கள், மறுவாழ்வு பெற்ற கொத்தடிமை தொழிலாளர்கள், யோகா தன்னார்வலர்கள் என 5000 பேர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளனர். விழா நடைபெறும் செங்கோட்டையில் அனைவருக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கும் எளிய அணுகல் வசதி செய்யப்பட்டு இருக்கிறது.
பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம்
பிரதமர் மோடி 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைக்கிறார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்படும். இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டு இருக்கும்.
கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்படுகிறது. இசையை இசைக்கும் ராணுவக் குழுவில் இந்த ஆண்டு அக்னிவீர் படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் இணைக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி செங்கோட்டை: அணிவகுப்பு மரியாதை ஏற்கும் பிரதமர் மோடி
இந்த விழா காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலையில் பிரதமர் வருகை தரும் போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்கிறார்கள்.
தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் ராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்படுவார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் செல்வார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொள்வார்.
இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளிக்கிறார்கள். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்குகிறது.
அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு செல்கிறார். அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்பார்கள்.