வாக்கு திருட்டு விசாரணை தொடர்பாக கர்நாடக சிஐடி-க்கு தேர்தல் ஆணையம் தரவுகள் அளிக்கவில்லை; ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் தேர்தல் வாக்கு திருடர்களை பாதுகாக்கிறது என்று ராகுல் காந்தி கூறினார்;

Update:2025-09-20 17:48 IST

திருவனந்தபுரம்,

2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது வாக்கு திருட்டு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணியின்போது 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.

இதனிடையே, கர்நாடகாவின் அலண்ட் தொகுதியில் 2023 சட்டசபை தேர்தலின்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கர்நாடக சிஐடி (குற்ற விசாரணை துறை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட சில தரவுகளை அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 18 மாதங்களில் 18 முறை சிஐடி கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வாக்கு திருட்டு விசாரணை தொடர்பாக கர்நாடக சிஐடி-க்கு தேர்தல் ஆணையம் தரவுகளை அளிக்கவில்லை என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கேரளாவின் வயநாடு தொகுதிக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசியதாவது,

வாக்கு திருட்டு தொடர்பான விசாரணைக்காக குறிப்பிட்ட தரவுகளை அளிக்கும்படி கர்நாடக சிஐடி போலீசார், தேர்தல் ஆணையத்திற்கு பல முறை கடிதங்களை அனுப்பியுள்ளனர். ஆனால், சிஐடி கேட்ட தரவுகளை தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது இதைவிட பெரிய குற்றச்சாட்டு இருக்க முடியாது. தரவுகளை அளிக்கும்படி போலீசார் கேட்கின்றனர். ஆனால், தரவுகளை தலைமை தேர்தல் ஆணையர் அளிக்கவில்லை. அதுதான் உண்மை. உண்மை நிலவரத்தை வெளிச்சம்போட்டு காட்டுவதுபோன்று நாங்கள் மற்றொரு ஹைட்ரஜன் குண்டை (வாக்கு திருட்டு தொடர்பான உண்மை) வீசப்போகிறோம். நாங்கள் ஆதாரமில்லாமல் எதையும் கூறப்போவதில்லை. நான் எனது கடமையை செய்வேன். தேர்தல் ஆணையம் தேர்தல் காவலாளிபோல் அமர்ந்துகொண்டு வாக்கு திருட்டை பார்த்துக்கொண்டு திருடர்களை (பாஜக) பாதுகாக்கிறது

இவ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்