போர்ப்பதற்றம் எதிரொலி.. ஈரான், இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
ஈரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
ஈரான்- இஸ்ரேல் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 98 9128109115, 98 9128109109 ஆகிய எண்களில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியர்கள் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரக அவசர எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதேபோல் இஸ்ரேல் வாழ் இந்தியர்களுக்கும் அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி +972 54-7520711, +972 54-3278392 -- மின்னஞ்சல் - cons1.telaviv@mea.gov.in இதில் இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என வெளியுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான வெளியுறவுத்துறை அறிவிப்பில், "இந்தப் பகுதியில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படையின் கட்டளை (https://oref.org.il/eng) அறிவுறுத்தும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள், நாட்டிற்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருங்கள்.
இந்திய குடிமக்களின் பாதுகாப்பு உட்பட, வளர்ந்து வரும் சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24*7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.