ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 28-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.;

Update:2025-04-23 11:41 IST

இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 28-ம் தேதி திங்கட்கிழமை நடைபெறும்.

நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலினின் தலைமையிலான, கடந்த 47 மாதகால விடியா திமுக ஆட்சியில், தமிழ் நாட்டு மக்கள் நிம்மதியுடன் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு பதிலாக, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் கொண்டுவந்து செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நீர்த்துப்போகச் செய்துள்ளதோடு; கிடப்பிலும் போட்டுவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு:

ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில், நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை அமைப்பதற்காக, அம்மா ஆட்சியில் 102.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக, இதுநாள் வரையிலும், பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான எந்த ஒரு பணியும் மேற்கொள்ளப்படவில்லை.

கழக ஆட்சியின்போது, பொதுமக்களின் குடிநீர் தேவையைக் கருத்தில்கொண்டு 59.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 நீர்தேக்கத் தொட்டிகளும், சுமார் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டிகளும் அமைக்கப்பட்டது. தற்போது இவை பயன்படுத்த இயலாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக இங்கு குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுவதால், கோடை காலமாக உள்ள தற்போதைய நிலையில், மக்கள் சொல்லொண்ணா அவதியுறுகின்றனர்.

மகான் ஸ்ரீ இராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில், ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அம்மா அவர்களால் இராமானுஜர் மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அம்மாவின் நல்லாசியோடு நடைபெற்ற கழக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட இந்த மணிமண்டபம் தற்போது எவ்வித பராமரிப்பும் இன்றி பாழடைந்துள்ளது.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வரும், விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாததோடு, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்; மக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அத்தியாவசியத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில், வரும் ஏப்ரல் 28-ம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணியளவில், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக இலக்கிய அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் எஸ்.எஸ்.வைகைச்செல்வன் அவர்கள் தலைமையிலும்; காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.சோமசுந்தரம்; குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மதனந்தபுரம் பழனி; மாவட்டக் கழக துணைச் செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும்; ஸ்ரீபெரும்புதூர் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்