அன்புமணி நடைப்பயணத்துக்கு தடை கோரி மீண்டும் மனு அளித்த ராமதாஸ்

உள்துறைச் செயலாளரிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-07-29 00:02 IST

சென்னை,

கல்வி, சமூகநீதி உள்பட 10 உரிமைகளை வலியுறுத்தி பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்பு நடைபயணத்தை செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதியில் கடந்த 25-ம் தேதி தொடங்கினார். அவருடைய இந்த சுற்றுப்பயணத்துக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

கட்சியின் நிறுவனரான எனது அனுமதி இல்லாமல் பா.ம.க. கொடியை பயன்படுத்தி நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அன்புமணியின் இந்த பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் கடிதம் அளிக்கப்பட்டது. அதே வேளையில், திட்டமிட்டப்படி டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது பயணத்தை தொடங்கிய நிலையில், அவரது பயணத்துக்கு போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை விதித்ததாக தகவல்கள் வெளியானது. இதுதொடர்பான சுற்றறிக்கையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், சுற்றறிக்கை தவறுதலாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே பாமக வழக்கறிஞர் கே. பாலு, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாலு, "இந்த பயணத்திற்கு தடை என்ற தகவல் கிடைக்கப்பெற்றது. இதை அறிந்து பா.ம.க.வினர் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அதன் பிறகு டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தடை விதிக்கப்பட்டது என செய்தி வெளியானது. அது தொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் வடக்கு மண்டல ஐஜி, தொடர்புடைய காவல் மாவட்ட கண்காணிப்பாளர்களிடம் பேசிய பின், தெளிவுபடுத்தினார்கள். இது தடை விதிப்பதற்கான சுற்றறிக்கை அல்ல என தெரிவித்தார்கள். இந்த சுற்றுப்பயணத்திற்கு காவல்துறை தடை என்பது தவறான செய்தி. தொடர்புடைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உரிய உத்தரவை பிறப்பிப்பார்கள் என தெரிவித்துள்ளார். திட்டமிட்டபடி நடைபயணம் நடைபெறும்" என விளக்கம் அளித்திருந்தார்

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக திட்டமிட்டப்படி அன்புமணியின் நடைபயணம் நடந்துவருகிறது.

இந்நிலையில், தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமாரை டாக்டர் ராமதாசின் உதவியாளர் சாமிநாதன் நேற்று சந்தித்தார். அவரிடம் டாக்டர் ராமதாஸ் எழுதிய கடிதத்தை வழங்கினார். அந்த கடிதத்தில், 'அன்புமணியின் நடைபயணத்தால் கட்சி நிர்வாகிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டு ஆங்காங்கே மோதல் ஏற்படுகிறது. இதனால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. எனவே அவருடைய நடை பயணத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.' என்று கூறியுள்ளார். இதனால் அன்புமணியின் நடைபயணத்திற்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்