குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.;

Update:2025-11-29 13:44 IST

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம் மற்றும் மேலச்செவல், சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தியுடன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், செயலாளர் கலைமுருகன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் நேரில் சென்று ஆய்வு செய்ததுடன், மாவட்ட கலெக்டரிடம் மனுவும் கொடுத்துள்ளனர்.

இதுபோல் திருச்சி உள்ளிட்ட பரவலாக பல மாவட்டங்களில் வாழை மரங்கள் முறிந்துள்ளன. இதுபோல் சில மாவட்டங்களில் கரும்பு, வெற்றிலை, மக்காச்சோளம் ஆகிய வேளாண் பயிர்கள் பாதித்துள்ளன. வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முறிந்து விட்டதால், ஒரு பருவம் இழந்து போனது. ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்க வேண்டியதை பறிகொடுத்துள்ளனர். எனவே இதை ஈடு செய்திடும் முறையில் நிவாரணம் வேண்டும் என விவசாயிகள் கோறுகிறார்கள்.

தென்மேற்கு பருவமழை முடியும் நிலையிலும், வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையிலேயே பெருமழையாக மாறி குருவை நெல் அறுவடை நிலையிலும், சம்பா, தாளடி இளம் பயிர்களும் பெருமளவு பாதித்தது. அறுவடையான நெல்லும் மழை பாதிப்பில் மற்றும் கொள்முதல் தேக்கத்தில் விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி விட்டது. சம்பா மற்றும் தாளடி இளம் பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி அழிந்து போயின. இந்த பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென அப்போது தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தோம். வேளாண் துறை அமைச்சரும் விவசாயிகளின் பாதிப்பிற்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். வேளாண் துறை அலுவலர்களின் கணக்கெடுப்பும் சரிவர நடைபெறவில்லை. நிவாரணமும் வழங்கிடவில்லை. இந்த நிலையில் மீண்டும் மறு விதைப்பு செய்து பயிர்கள் வளர்ந்து வந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தீவிரமாகியுள்ளது.

எனவே விவசாயிகளின் இழப்பை ஈடு செய்திடும் நிலையில் குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் மற்றும் சம்பா, தாளடி பயிர்களின் பாதிப்பிற்கு உரிய அளவு நிவாரணமும் உடனே வழங்கிட வேண்டும்.

மேலும் வடகிழக்கு பருவ மழை தீவிரமாகி உள்ளது. புயலும் வர உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்துள்ளது. எனவே தேங்கும் மழை நீரை உடனுக்குடன் வடித்திட, வடிகால்களை அவசரமாக சீரமைக்கவும், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறையை முடுக்கி நடவடிக்கை எடுத்திட தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்