தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டும்- செல்வப்பெருந்தகை

தமிழக மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க இந்திய-இலங்கை மீனவர்கள் ஆணையம் அமைத்து அதன் மூலம் இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை ஒழுங்குபடுத்த வேண்டும்.;

Update:2025-11-12 15:00 IST

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கை கடற்பகுதியில் சர்வதேச கடல் எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் நீதிமன்றங்கள் சிறையில் அடைப்பதும், அபராதம் விதிப்பதும் பா.ஜ.க. ஆட்சியில் தொடர் கதையாக நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பலமுறை கடிதம் எழுதியிருக்கிறார். எந்த கடிதத்திற்கும் உரிய தீர்வை ஒன்றிய அரசு எடுக்கவில்லை. இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தவும் முன்வரவில்லை.

இத்தகைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இருநாட்டு பிரதிநிதிகள் கொண்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2016-ல் அமைக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு ஒருமுறை இக்குழு கூடி ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். ஆனால் கடந்த 30 அக்டோபர் 2025-ல் புதுடெல்லியில் ஏழாவது முறையாக கூடி பேசியிருக்கிறார்கள். இதில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 2016-ல் இருந்து 2025-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு இரண்டு முறை வீதம் 18 முறை பேசியிருக்க வேண்டும். ஆனால் 7 முறை தான் பேசியிருக்கிறார்கள். கூட்டு நடவடிக்கைக்குழு மூலமாக தீர்வு காண மத்திய அரசு தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்த 14 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் 128 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதோடு, 248 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது இலங்கை அரசு 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய இலங்கை மீன்பிடி சட்டத்தின்படி தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை தேசியமயமாக்கி ஏலத்தில் விடப்படும் என்ற நடைமுறையை பின்பற்றுகிறது. இந்த சட்டத்தின்படி ஒரு படகிற்கு இலங்கை ரூபாயில் 3.5 கோடி, அதாவது இந்திய ரூபாயில் 1 கோடி அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.

இதுவரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களும், படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இத்தகைய மனிதாபிமானமற்ற இலங்கை அரசின் நடவடிக்கைகளினால் கடலோரத்தில் அமைந்துள்ள 13 மாவட்டங்களில் 422 மீனவ கிராமங்களில் வசிக்கிற 75,721 குடும்பங்களும், அதை நம்பியிருக்கிற 20 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென தமிழ்நாடு மீனவ சமுதாய தலைவர்கள் விரும்பியதன் அடிப்படையில் இலங்கை மீனவ சமுதாய தலைவர்களோடு சமீபத்தில் ஒரு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு இடையூறாக இருப்பது தமிழக மீனவர்கள் பின்பற்றுகிற இழுவலை மீன்பிடிப்பு முறைதான். இந்த முறையை இலங்கை மீனவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. பாரம்பரிய மீன்பிடிப்பு முறைகளில் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு இலங்கை மீனவர்கள் ஒத்துழைக்க தயாராக உள்ளனர். இத்தகைய மீன்பிடி முறை குறித்து தமிழ்நாடு மீனவர் தலைவர்களும், இலங்கை மீனவர் தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இறுதி தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இந்த கருத்திற்கு வலிமை சேர்க்கின்ற வகையில் இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராப் ஹக்கீம் திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது மீனவர் பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்திய-இலங்கை மீனவர்கள் ஆணையம் அமைத்து அதன் மூலமாக இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடி தொழிலை இருநாட்டு மீனவர்களும் பயன் பெறுகிற வகையில் ஒழுங்குபடுத்த வேண்டுமென்று கூறியிருக்கிறார். இத்தகைய சுமூகமான தீர்வை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்.

எனவே தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை மத்திய பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற காலத்திலிருந்து உரிய அணுகுமுறையின்றி தீர்க்கப்படாமல் இருக்கிறது. இந்த பிரச்சினையில் பாதிக்கப்பட்ட, குறிப்பாக தமிழ்நாடு மீனவர் தலைவர்களும், இலங்கை மீனவர் தலைவர்களோடு பேசி சுமூக தீர்வு காண மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்