208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன்படி சென்னை அடையாறில் சுகாதாரத்துறை சார்பில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
போதைப்பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு - இன்று மாலை தீர்ப்பு
கொகைன்' போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் ஸ்ரீகாந்தை ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
"ஓரணியில் தமிழ்நாடு" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாக பிரசாரம்
திமுக தலைவரும் முதல் அமைச்சருமான முக ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் வீடு வீடாக சென்று தனது பிரசாரத்தை முன்னெடுத்தார். இதேபோல மாவட்டங்களில் அமைசர்கள், கட்சி நிர்வாகிகள் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம்: பாஜகவினருக்கு அழைப்பு
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்த அழைப்பை ஏற்று வருகிற 7-ந்தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம். தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயண தொடக்க விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் பாஜகவினர் பங்கேற்க உள்ளனர்.
மின்சார பஸ்களில் ரூ.1,000- பயண அட்டை செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
மாதாந்திர ரூ.1,000- பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்த நிலையில், ஆயிரம் ரூபாய் பாஸ் வைத்து இருக்கும் பயணிகள் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
அதேபோல, சிங்கார சென்னை கார்டு வைத்து இருக்கும் பயணிகளும் இந்த பஸ்சில் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உயிருக்கு அச்சுருத்தல்.." - அஜித்குமார் போலீசாரால் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்தவர் பரபரப்பு பேட்டி
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ எடுத்த அவரது நண்பர் சத்தீஸ்வரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அஜித்குமார் கஸ்டடி மரணத்தில் சாட்சிகளாக உள்ள அனைவரும் அச்சத்தில் உள்ளனர். சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். நடந்தது என்ன என்பதை நீதிமன்றத்தில் கண்டிப்பாக தெரிவிப்பேன். நான் தான் அஜித்குமாரை அடித்தேன் என்று என் மீதே பொய் புகார் கூறினர்.
நீதி வழங்கக்கூடிய தெய்வமாக பார்க்கப்படும் மடப்புரம் காளியம்மன் கோவில் முன்பு இப்படி அநீதியாக நடந்ததை இப்போது வரை என்னால் ஏற்கமுடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை: ராமதாஸ் திட்டவட்டம்
தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், “அருளை நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை. நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது. என் மனம் வேதனை படும் அளவுக்கு செய்கின்றனர். பாமக கொறடாவாக அருள் தொடர்வார். எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு நான் கட்சியை நடத்தி வருகிறேன்” என்று அவர் கூறினார்.
எல்லை தாண்டி மீன் பிடித்தால்.. படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும் - இலங்கை அமைச்சர் எச்சரிக்கை
எல்லை தாண்டி மீன் பிடித்தால் கைது மற்றும் படகு பறிமுதல் நடவடிக்கை தொடரும் என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கூறுகையில், “இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடிக்கும் முறைகளை பின்பற்றுகின்றனர். இதனால் கடல்வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் இலங்கையின் வடக்கு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ்-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று நாளுக்குள் முடிந்த தொடக்க டெஸ்டில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செயின்ட் ஜார்ஜ் நகரில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது