நேபாள அதிபர் வீட்டிற்கு தீ வைப்பு
நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் வீட்டிற்கு போராட்டகாரர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் செனாபா பகுதியில் உள்ள நேபாள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கும், ராஜினாமா செய்த உள்துறை மந்திரி ரமேஷ் லேகாக் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது.
சமூக ஊடகங்கள் மீதான தடை நீக்கப்பட்ட நிலையில் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. வன்முறை தொடரும் நிலையில் மேலும் 2 மந்திரிகள் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு
தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
13-ம் தேதி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா
இளையராஜாவின் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழா வரும் செப்டம்பர் 13ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் வெளிநாட்டு இசைக்கலைஞர்களுடன் இசைக்கச்சேரி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பரபரக்கும் அரசியல் களம்.. விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியானது.!
தவெக தலைவர் விஜயின் சுற்றுப்பயணத்துக்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி டிஜிபி அலுவகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜயின் சுற்றுப்பயண விபரம் வெளியாகியுள்ளது.
ஆசிய கோப்பை: இந்தியா வலுவான அணிதான் ஆனால்... - பாக்.முன்னாள் வீரர்
ஆசிய கோப்பையில் இந்தியா மிகவும் வலுவாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் உமர் குல் தெரிவித்துள்ளார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் அல்லது பந்து வீச்சில் வெளிப்படுத்தும் ஒரு நல்ல செயல்பாடு வெற்றியை மாற்றக்கூடியது என்று அவர் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தான் அணி இந்தியாவை வெல்ல வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அதிரடி உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டு
வாக்காளர் பட்டியல் மோசடி குறித்த புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதற்கு பிறகும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான சூழல் தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது
போராட்டக்காரர்களை நேபாள அரசு கையாண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேபாள வேளாண்துறை மந்திரி ராம்நாத் அதிகாரி தற்போது பதவி விலகி உள்ளார். காத்மாண்டுவை உலுக்கி வரும் இளைஞர்கள் தலைமையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் இரண்டு முக்கிய மந்திரிகள் ராஜினாமா செய்ததை அடுத்து, நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி மிகப்பெரும் அரசியல் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளார். இந்த சூழலில் அவர் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் ஒலி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் கடினமான சூழலில் மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தாக்குதல் சம்பவம் எதிரொலி.. டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
ஏர்போர்ட் மூர்த்தி-விசிகவினர் தாக்குதல் எதிரொலியாக, டி.ஜி.பி. அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் முறையீடு
காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவுக்கு எதிராக காவல்துறை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி இந்த முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் இன்று பிற்பகல் விசாரிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் ஏதோ ஒன்று வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது என்றும் நீதிபதி என்.சதீஷ்குமார் தெரிவித்தார்.