இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-05-2025

Update:2025-05-20 09:11 IST
Live Updates - Page 2
2025-05-20 07:28 GMT

சுப்ரீம் கோர்ட்டு இன்று வெளியிட்ட தீர்ப்பில், முன்சீப், மாஜிஸ்திரேட் போன்ற நீதித்துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க மூன்றாண்டு வழக்கறிஞர் அனுபவம் கட்டாயம் என தெரிவித்து உள்ளது.

2025-05-20 07:10 GMT

சிவகங்கையில் மல்லாங்கோட்டை கிராமத்தில் கல்குவாரியில் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது, மண் சரிந்து விழுந்ததில் 3 பேர் மண்ணில் புதைந்தனர். இதில் அவர்கள் மூச்சு திணறி பலியாகி உள்ளனர்.

2025-05-20 06:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற திரவுபதி அம்மன் தேரோட்ட திருவிழாவில், தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஒருவர் உயிரிழந்து உள்ளார். படுகாயம் அடைந்த 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

2025-05-20 05:56 GMT

திருப்பூர் சாலை விபத்தில் 3 பேர் பலி

திருப்பூர் காங்கேயம் அருகே கார் மரத்தில் மோதியதில், 15 வயது சிறுமி உள்பட 3 பேர் பலியானார்கள். 10 வயது சிறுமி படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

2025-05-20 05:49 GMT

தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.69,680க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.8,710 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2025-05-20 05:20 GMT

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதனால், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

2025-05-20 04:35 GMT

மதுரை: சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் உள்பட 3 பேர் பலி

மதுரையில் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. இதனை முன்னிட்டு, அந்த பகுதியில் மின் தடையும் ஏற்பட்டது. இதனால், வீட்டில் இருந்தவர்களில் சிலர் வெளியே வந்து அமர்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது, மழையால், வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்ததில் சிக்கி 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

2025-05-20 04:25 GMT

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 3 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இதன்படி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நேற்று சந்தித்து பேசினார்.

புதினுடன் இரண்டரை மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டதில், உக்ரைன் பேச்சுவார்த்தையில் சில முன்னேற்றத்திற்கான விசயங்கள் நடந்துள்ளன என அவர் கூறினார். இதுபற்றி வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் அவர் பேசும்போது, ஒவ்வொரு வாரமும் 5 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்படுகிற பயங்கர சூழல் உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பலருடனும் நாங்கள் பேசியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகள் உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவார்கள் என குறிப்பிட்டார். அதற்கேற்ப வாடிகன் தலைமையும், பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளது என்றார்.

2025-05-20 04:10 GMT

குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

எனினும், ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை.

2025-05-20 03:46 GMT

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் பல்வேறு பகுதிகளிலும் சில நாட்களாக கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தியது.

இதில், பெங்களூருவின் பல பகுதிகளில், தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

பஸ், ரெயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகளும் அதிக அவதிக்கு உள்ளானார்கள். அரையடி உயரத்திற்கு வீடுகளை சுற்றி வெள்ளநீர் சூழ்ந்தது. கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பகுதியளவு மூழ்கின. இந்நிலையில், பெங்களூருவில் தொடரும் கனமழையால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்