தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் குடமுழுக்கு நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. வருகிற 7-ந்தேதி குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
வக்பு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக்கழகம் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது. இதன்படி, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மாவட்ட தலைநகரில் போராட்டத்தில் ஈடுபடவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மேலும் 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு உள்ளது. பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி, செட்டிகுளம் சின்ன வெங்காயம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டு உள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்வடைந்து உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக பா.ஜ.க. உறுப்பினர் அனுராக் தாக்குர் மக்களவையில் பேசியது சர்ச்சையானது. வக்பு நில ஆக்கிரமிப்பில் கர்நாடகத்தில் உள்ள தலைவர் ஒருவர் ஈடுபட்டு உள்ளார் என கார்கேவை சுட்டிக்காட்டி பேசினார். அவருடைய சர்ச்சையான இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.
பிரதமர் மோடி இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன் ஒரு பகுதியாக இன்று காலை அவர் விமானத்தில் தாய்லாந்து நாட்டுக்கு புறப்பட்டார். அவர் அந்நாட்டில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதன்பின்பு இலங்கைக்கு பயணம் மேற்கொள்வார். இந்நிலையில், தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் நகரை பிரதமர் மோடி சென்றடைந்து உள்ளார்.
அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க, அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினர் தயாராக உள்ளனர். வந்தே மாதரம் மற்றும் ஜெய்ஹிந்த் என முழக்கமிட்டமடி பாங்காக் நகரில் காத்திருக்கின்றனர்.
வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு வெளியே தி.மு.க. உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிவடைந்து 75,811.12 புள்ளிகளாக உள்ளது.
இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 182.05 புள்ளிகள் சரிவடைந்து 23,150.30 புள்ளிகளாக உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்த வங்காளதேச நாட்டை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து போலி ஆதார் அட்டை உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அறிமுகம் இல்லாத நபர்களுக்கு உரிய பின்னணியை ஆராயாமல் வேலை அளிக்க கூடாது என கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு காவல் துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.400 அதிகரித்து ரூ.68,480-க்கும், ஒரு கிராம் ரூ.8,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் குறைந்து ரூ.85.78 ஆக என்ற அளவில் உள்ளது.