பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒரு யூடியூபர் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஜான் மஹால்’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வந்த ஜஸ்பிர் சிங்கிற்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2020 முதல் 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளார் ஜஸ்பிர் சிங். பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக ஜோதி மல்கோத்ரா கைதான பின், ஐஸ்பிர் சிங் தன்னிடம் இருந்த தகவல் தொடர்பு ஆதாரங்களை அழிக்க முயன்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தக் லைப் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாளை காலை மட்டும் 9 மணி சிறப்புக் காட்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நாளை மொத்தம் 5 காட்சிகளை திரையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை: அமைச்சர் கே.என்.நேரு
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் தமிழ் மொழியில் இருந்துதான் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகள் வந்தன என்றும் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
வருகிற 8-ம் தேதி மதுரை வருகிறார் அமித்ஷா
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 8-ம் தேதி மதுரை வருகிறார். இந்த பயணத்தின்போது தென்மாவட்டங்களை சேர்ந்த பாஜக நிர்வாகிகளை அமித்ஷா சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக பொதுக்குழு மதுரையில் நடைபெற்ற நிலையில் அமித்ஷாவும் மதுரைக்கு வர இருப்பது அரசியல் களத்தில் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில்,
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்தாலும், அந்த அளவிற்கு தீவிரம் இல்லை, தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும். இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறினார்.
சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்‘
சென்னையில் மேலும் 10 இடங்களில் 'முதல்வர் படைப்பகம்' அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 7 இடங்களிலும், மாநகராட்சி சார்பில் 3 இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் விற்பனை படுஜோர்
உளுந்தூர்பேட்டை ஆடு சந்தையில் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று சுமார் ரூ.5 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனை ஆகியுள்ளது. எடைக்கு ஏற்ப ஆடுகள் ரூ.25,000 வரை விலை போயுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
தரமான சாலை, கட்டமைப்பு இல்லாததால் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க உயர் நீதிமன்றம் நேற்று தடை விதித்த நிலையில், புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் இன்று கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடியின் குறுக்கே லாரியை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பணமோசடி வழக்கில் இன்று விசாரணை
அரசு வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்த விவகாரத்தில் கைதான அதிமுக ஐ.டி. விங் மாநில நிர்வாகி மயிலாப்பூர் பிரசாத், அஜய் வாண்டையார் உள்பட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய போலீசாரின் மனு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
மேட்டூர் அணையில் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வரும் 12-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறக்க உள்ள நிலையில், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் இன்று அணையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் அணை குறித்து கேட்டறிந்தார்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6,234 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 113 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 82.743 டி.எம்.சி. ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது.