டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு இம்மாதம் 1-ம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படும். 6,567 மேற்பார்வையாளர்கள், 14,636 விற்பனையாளர்கள், 2,426 உதவி விற்பனையாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
“2010 போல இந்த ஆண்டும்...” - சென்னை அணியின் சி,இ.ஓ. காசி விஸ்வநாதன்
சென்னை அணியின் சி,இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறுகையில், “இந்த தொடரில் சி.எஸ்.கே. இதுவரை சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். அது உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருக்கலாம். இனி வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சிப்போம்.
2010-ம் ஆண்டு 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளை வென்று கோப்பையை வென்றது சென்னை அணி. அதே போன்று இந்த ஆண்டும் வெல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் கடந்த ஆண்டை விட ரூ.2,489 கோடி அதிகரிப்பு
2024-25 ஆண்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் ரூ. 48,344 கோடி தமிழக அரசு வருவாய் ஈட்டியுள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
மனுதாரர்கள் தரப்பில், 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பு தினசரி ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு நிபந்தனை விதித்தார்.
துணை வேந்தர்கள் மாநாடு: ஜெகதீப் தங்கர் பங்கேற்பு - கவர்னர் மாளிகை அறிவிப்பு
ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி 4ஆம் ஆண்டாக நடைபெறும் மாநாட்டை 25ஆம் தேதி தொடங்கி வைத்து துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உரையாற்றுகிறார்.
மேலும் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்றும், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயபுரம் அருகே மின்சார ரெயில் சேவை பாதிப்பு
சென்னை ராயபுரம் அருகே ஆவடியில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஆவடியில் இருந்து வந்த மின்சார ரெயிலின் 3-வது பெட்டியின் இரண்டு சக்கரங்கள் விலகியதால் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மின்சார ரெயில் சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடு குறித்து சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் - ஐகோர்ட்டு உத்தரவு
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு, நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மூன்று மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்று கூறி, செவிலியர்கள் தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
மேலும் இந்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால், கோர்ட்டு அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாரதிதாசன் பிறந்தநாள்: தமிழ் வார விழா; சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் 29 முதல் மே 5ம் தேதி வரை 'தமிழ் வார விழா' கொண்டாடப்பட உள்ளது.
சட்டசபையின் 110 விதியின் கீழ் பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
சவுதி அரேபியா புறப்பட்டார் பிரதமர் மோடி
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று சவுதி அரேபியா புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சவுதி புறப்பட்டார். அவர் சவுதி பட்டத்து இளவரசர் முகமதுபின் சல்மானை சந்திக்கிறார்.