இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

Update:2025-08-24 09:25 IST
Live Updates - Page 4
2025-08-24 05:18 GMT

வெட்கமும் இல்லை... கோபமும் இல்லை; எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன்: கமல்ஹாசன்


சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. ஒன்று தாய்மொழி, ஒன்று ஆங்கிலம் மற்றொரு மொழி கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மற்றொரு மொழி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு 6 மொழி தெரியும். எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் தான்” என்று கூறினார்.


2025-08-24 05:16 GMT

நைஜீரியா: ராணுவத்தின் வான்வழி தாக்குதலில் 35 பயங்கரவாதிகள் பலி


நாட்டின் வடகிழக்கே போர்னோ மாகாணத்தில் போகோஹரம் பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு அந்நாட்டின் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தியது.

கேமரூன் நாட்டுக்கு அருகே கும்ஷே பகுதியில் 4 இடங்களை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில். 35 பேர் உயிரிழந்து உள்ளனர் என நைஜீரிய விமான படையின் செய்தி தொடர்பாளர் எஹிமென் எஜோடேம் கூறினார்.

நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு, பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், அவர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதுடன் தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

2025-08-24 04:45 GMT

தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்


கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆதரவைப் பெற தே.ஜ.கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இந்த வாரம் தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

2025-08-24 04:17 GMT

2027 ஒருநாள் உலகக்கோப்பை: தென் ஆப்பிரிக்காவில் 44 போட்டிகள் - வெளியான தகவல்


2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும். தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அதற்கான பணிகளை செய்து வருகிறது.

இந்த நிலையில் மொத்த போட்டிகளில் 44 போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும். 8 இடங்களில் போட்டி நடத்தப்படும். 10 போட்டிகளில் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் நடத்தப்படும் என உலகக்கோப்பை தொடருக்கான தங்களது திட்டங்களை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் விவரித்துள்ளது.

2025-08-24 04:16 GMT

இந்தியாவிலேயே முதல் பணக்கார முதல்-மந்திரி யார்..? கடைசி இடத்தில் இருப்பவர் இவரா..?


ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏ.டி.ஆர்.) ஆண்டு தோறும் பல்வேறு புள்ளிவிவரங்களை வெளியிடும். அதன்படி இந்த ஆண்டில் இந்தியாவின் பணக்கார முதல்-மந்திரிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.


2025-08-24 04:14 GMT

கடைசி ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு


தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெக்காய் நகரில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா முனைப்பு காட்டும்.

அதேவேளையில், ஆறுதல் வெற்றிக்காக ஆஸ்திரேலியா கடுமையாக போராடும். இதனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

2025-08-24 04:12 GMT

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 10,850 கன அடியாக குறைவு


இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வரும் நீர் 15 ஆயிரம் கன அடியில் இருந்து 10,850 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் 10,850 கன அடியாக உள்ளது. அணையின் நீர் மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.470 டி.எம்.சி. ஆகவும் உள்ளது.



2025-08-24 04:10 GMT

சட்டசபை தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? கிருஷ்ணசாமி பதில்

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

ஜனவரி 7-ந் தேதி மதுரையில் புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும். பள்ளி பாடப்புத்தகத்தில் அது குறித்தான பாடங்களை சேர்க்க வேண்டும். த.வெ.க. மாநாட்டை விஜய் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். அங்கிள் என்ற வார்த்தை ஒன்னும் கெட்டவார்த்தை கிடையாது. த.வெ.க.வுடன் கூட்டணி சேர்வீர்களா என்று கேட்கிறீர்கள். எங்கள் கட்சி மாநாட்டிற்கு பிறகு தான் எதுவாக இருந்தாலும் கூற முடியும்.

தமிழகத்தில் 70 ஆண்டுகளாக திரைபிம்பத்தை வைத்து தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் விஜய்யை மட்டும் ஏன் டார்க்கெட் செய்கிறார்கள். 30 நாளுக்கு மேல் சிறையில் இருக்கும் முதல்-அமைச்சரை பதவியில் இருந்து நீக்கக்கூடிய சட்டத்தை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

2025-08-24 04:09 GMT

பாஜகவின் முக்காடுகளை ராகுல் காந்தி கிழித்துள்ளார்: உத்தவ் தாக்கரே சாடல்


உத்தவ் சிவசேனா கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா ராஜ்ய சிக்ஷக் சேனாவின் நிகழ்ச்சியில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே கூறுகையில், “தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் வாக்கு திருட்டு நடப்பதை தடுக்கவேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டால் பா.ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணியால் வெற்றி பெற முடியாது. அதிலும் நிச்சயமாக மராட்டியத்தில் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்தார்.


2025-08-24 04:05 GMT

வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஞாயிறு விடுமுறையான இன்று அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் திரண்டு சூரியன் உதயமான காட்சியை கண்டு ரசித்தனர். தொடர்ந்து அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்