மக்கள் பிரதிநிதிகள் இருக்கையில் அரசு செயலாளர் திடீர் பேட்டி ஏன்? தமிழக அரசுக்கு பழனிசாமி கேள்வி
உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு ஒரு நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.;
சென்னை,
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என தவெகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில், கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், வேலுசாமிபுரம் ஒதுக்கப்பட்டது, ஆம்புலன்ஸ்கள் வருகை குறித்து தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தனர்.
இந்தநிலையில், மக்களை காப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க பிறர் மீது காரணம் சுமத்துவதே அரசின் நோக்கம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பதிவில்;-
கரூர் துயரச்சம்பவத்துக்குப் பிறகு ஸ்டாலின் அரசு முற்றிலும் சீர்குலைந்த நிலையில் உள்ளது. மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஏற்கனவே ஒரு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டு, அது பணியைத் தொடங்கிய நிலையில், அரசின் பேச்சாளர் என்ற வகையிலும் கூட ஒரு செயலாளர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவதன் அவசியம் என்ன?
இது, அந்தக் குழுவின் கருத்துக்களை பாதிக்கும் வகையிலும், நீதியிலான அவமதிப்பாகவும் கருதப்பட வேண்டியதல்லவா? ஆனால் ஸ்டாலின் அரசுக்கு எந்த விதமான நெறிமுறைகளும், ஒழுக்கமும் இல்லை; அவர்களுக்கு முக்கியமானது இந்த 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த இந்தக் கொடூரச் சம்பவத்துக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதுதான். மேலும் உண்மை சம்பவத்தை மறைப்பதற்கு இப்படிப்பட்ட நாடகத்தை இந்த அரசு அரங்கேற்றி இருப்பது மக்களிடேயே மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.