மூன்றாவது நாட்டின் சமரசம் இந்தியாவுக்கு தேவையில்லை

சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு நான்தான் காரணம் என்று டிரம்ப் கூறிவருகிறார்.;

Update:2026-01-28 07:41 IST


அரசியல்வாதிகள் பலரும் மறைந்த தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தலைவர் உயிரோடு இருக்கும்போது என்னிடம் இப்படி சொன்னார், அப்படி சொன்னார் என்று கூறி பெருமையடித்துக்கொள்வது வழக்கம். இறந்து போன தலைவர் எழுந்து வந்து நான் எங்கே? எப்போது? அப்படி சொன்னேன்? என்று கேட்கவா போகிறார் என்ற தைரியத்தில் எதையும் சொல்வது வாடிக்கையாகிவிட்டது.

அதேபோலத்தான் முடிந்துவிட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன வெளியுறவு மந்திரி வாங் யீயும் சொல்ல புறப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 22-ந்தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 26 பேர் பலியானார்கள்.

அவர்களின் மனைவிகள் இழந்த குங்குமத்துக்கு பதில் அளிக்கும்வகையில் இந்திய ராணுவம் மே மாதம் 7-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களிலும், ராணுவ நிலைகளிலும் துல்லிய தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்தியா பெயரிட்டது. இந்த போரை இந்தியா எவ்வளவு வீராவேசமாக நடத்தியது என்பதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சில நாட்களுக்கு முன்பு சொல்லியிருப்பதே சாட்சியாகும்.

சமீபத்தில் அவர் தன் மனைவியான முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் 18-வது நினைவு நாளில் பேசியபோது, இந்தியா கடந்த ஆண்டு ஆபரேஷன் சிந்தூரை பாகிஸ்தான் மீது நடத்தியபோது என்னிடம் ராணுவ செயலாளர் வந்து சார், போர் தொடங்கிவிட்டது. நாம் பதுங்கு குழிக்கு சென்று பதுங்கிக்கொள்வோம் என்று ஆலோசனை கூறினார். நான் அவரிடம் தலைவர்கள் போர்க்களத்தில்தான் சாவார்கள் என்று கூறி மறுத்துவிட்டேன். அவர் கூறியது ஒன்றே இந்தியாவின் வீரத்துக்கு சாட்சி.

இந்தியாவின் தாக்குதலை சமாளிக்கமுடியாமல் பாகிஸ்தான் ராணுவ தளபதி, நமது ராணுவ தளபதியிடம் போரை நிறுத்துமாறு மன்றாடி கேட்டுக் கொண்டார். ராணுவத்தில் ஒரு நாட்டு தளபதி மற்றொரு நாட்டு தளபதியிடம் போரை நிறுத்தக் கேட்டுக்கொண்டால் போரை நிறுத்துவதுதான் மரபு. அந்தவகையில்தான் பாகிஸ்தானுடன் நடத்திய போரை இந்தியா மே 10-ந்தேதி நிறுத்தியது.

ஆனால் அதற்குள் பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களையெல்லாம் இந்தியா அழித்துவிட்டது. இதைத்தான் இந்திய வெளிவிவகாரத்துறை வெளியிட்ட அறிக்கையிலும், 17-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் போனில் பேசியபோதும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை போல இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு நான்தான் காரணம் என்று டிரம்ப் கூறிவருகிறார்.

60-க்கும் அதிகமான முறை இதை அவர் சொல்லிவிட்டார். இந்தியாவும் தொடர்ச்சியாக இதனை மறுத்துவருகிறது. இப்போது சந்தடி சாக்கில் சீனாவும் நாங்கள்தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு மத்தியஸ்தராக செயல்பட்டோம் என்று கூறியிருக்கிறது. இதனை தெரிவித்தவர் வேறு யாருமல்ல, சீனாவின் வெளியுறவு மந்திரி வாங் யீதான். அவர் சீனாவின் சக்திவாய்ந்த அரசியல் தலைமைக்குழு உறுப்பினராவார்.

சீனாவின் கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்த 3-வது நாடு மத்தியஸ்தம் எதுவும் செய்யவில்லை என்று ஆணித்தரமாக இந்தியா தெரிவித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய வெளிவிவகாரத்துறை செயலாளராக ஸ்ரீபிரியா ரங்கநாதன் என்ற தமிழ் பெண் அதிகாரி பதவியேற்று இருக்கிறார். அவருக்கு இப்போது இதையெல்லாம் மறுப்பதுதான் முதல் வேலையாகிவிட்டது.

Tags:    

மேலும் செய்திகள்