உழைப்புக்கு உதாரணம் பெண்கள் - யாழினி


உழைப்புக்கு உதாரணம் பெண்கள் - யாழினி
x
தினத்தந்தி 9 April 2023 1:30 AM GMT (Updated: 9 April 2023 1:30 AM GMT)

பெண்கள் தான் எப்போதும் என்னுடைய முன்னுதாரணம். ஏனென்றால், வீட்டு வேலைகளை செய்து, குடும்பத்தை கவனித்து, அலுவலகத்துக்கும் சென்று பணியாற்றும் திறன் கொண்டவர்கள் அவர்கள். வீட்டில் உறுதுணையாக யாரும் இல்லையென்றாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களை நினைத்தால் ஊக்கம் தானாக பிறக்கும்.

"எந்த சூழ்நிலையிலும் நமக்கான குறிக்கோளை விட்டுக்கொடுக்கக் கூடாது. நம்மை நம்பி பொறுப்பை ஒப்படைத்தவர்களுக்காக முழு மூச்சுடன் செயல்பட்டு வெற்றி காணவேண்டும்" என்கிறார் யாழினி என்ற பரம்காஞ்சி. இவர் தனது நிறுவனத்தின் மூலம் முக்கிய நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொடுத்தல், விளம்பரப்படுத்துதல், பங்கேற்பாளர் மேலாண்மை போன்ற சேவைகளை செய்து அந்த நிகழ்வுகளை மேம்படுத்தி கொடுக்கிறார். சிறுவயதில் இருந்தே தனது முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த தயக்க உணர்வை விடாமுயற்சியால் உடைத்தெறிந்து, தற்போது வெற்றிகரமான இளம் தொழிலதிபராக வலம் வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.

"நான் திருப்பூரைச் சேர்ந்தவள். என்னுடைய அப்பா சண்முக சுந்தரம் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அம்மா பாக்கியலட்சுமி இல்லத்தரசி. நடுத்தரக் குடும்பம் என்றாலும், அவ்வப்போது வறுமையையும் அனுபவித்துதான் வளர்ந்தேன். பள்ளிக் கட்டணம் கட்டுவதற்குக்கூட பணம் இல்லாமல் சிரமப் பட்ட நாட்களும் உண்டு. ஆண்-பெண் இருபாலரும் இணைந்து படித்தாலும், மாணவர்களும் மாணவிகளும் பேசி பழகக் கூடாது என்ற விதிமுறை நான் படித்த பள்ளியில் இருந்தது. அதனால் யாரிடமும் வெளிப்படையாக பழகாமல் வளர்ந்தேன். மற்றவர்களிடம் பேசுவதற்கு அதிக தயக்கம் காட்டினேன்.

அந்த நிலையில்தான், எனது தந்தை நடத்திய தொழிலில் திடீரென பின்னடைவு ஏற்பட்டது. குடும்பத்தில் வறுமை அதிகரித்தது. எனவே, பன்னிெரண்டாம் வகுப்பு படிக்கும்போது பகுதிநேர வேலை தேடி அலைந்தேன். ஆனால், அந்த வயதில் எனக்கு எந்த பணியும் கிடைக்கவில்லை. அத்தனை சிரமத்திலும், எனது தந்தை என்னை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தார். நான் கோயம்புத்தூரில் ஒரு விடுதியில் தங்கி படித்தேன். கல்லூரி கட்டணத்தைத் தவிர, மற்ற எனது அனைத்து தேவைகளையும் சிறுசிறு வேலைகள் செய்து நானே நிறைவேற்றிக்கொண்டேன்.

படித்து முடித்ததும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். இரவு நேரத்தில் தூங்காமல் பணியாற்றியதால் எனது உடல்நலத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. எனவே அந்த வேலையில் இருந்து விலகினேன். கோயம்புத்தூர் வந்து ஒரு சிறிய நிறுவனத்தில் குறைந்த சம்பளத்தில் பணிக்கு சேர்ந்தேன். அங்கு நான் கடினமாக உழைத்தும், 'பெண்' என்ற காரணத்தால் எனக்கு பதவி உயர்வு மற்றும் பிற சலுகைகள் கிடைக்க தாமதமாகியது. 'பெண்கள் திருமணம் முடிந்ததும் பணியில் இருந்து விலகி விடுவார்கள். எனவே அவர்களுக்கு பதவி உயர்வு தருவது வீண்' என்று அதற்கு காரணம் கூறினார்கள்.

எனவே அந்தப் பணியில் இருந்து விலகி, தனியாக எனது நிறுவனத்தை ஆரம்பித்தேன். நண்பர்களுடன் இணைந்து பணியாற்றினேன். எனது பணி திருப்திகரமாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிகரித்தனர். இருந்தாலும் என்னால் அதில் போதுமான வருமானம் ஈட்ட முடியவில்லை.

வங்கியில் கடன் பெறுவதற்கான முயற்சி தோல்வி அடைந்தது. போதுமான அளவு அனுபவம் இல்லாததால், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் எவரும் முன் வரவில்லை. இந்த நிலையில் தயக்கத்துடன் சென்று என் தந்தையிடம் இதைப் பற்றி கூறினேன். அவர் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு, வீடு கட்டுவதற்காக தனது வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த பணத்தை எனது தொழிலுக்கு முதலீடாகக் கொடுத்தார். அது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆனால் என் அப்பா, ''ஒரு பெண் தொழில் செய்ய போகிறேன் என்று சொல்வதை, நான் பெரிய விஷயமாகக் கருதுகிறேன். உனக்கு, உன் குடும்பமே ஆதரவு தரவில்லை என்றால் எப்படி? நல்லபடியாக வெற்றி பெற்று வா" என்றார்.

தந்தை தந்த ஊக்கத்தால் எனது நிறுவனத்தை விரிவுபடுத்தினேன். நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்றது. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்போது கொரோனா பரவல் ஆரம்பித்தது. எனவே சற்று தொய்வு ஏற்பட்டது. அந்த நேரத்தில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் இந்த தொழிலை கைவிட்டு வேறு வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால், இக்கட்டான நேரத்தில் எனக்கு உதவிய எனது கணவர், நண்பர்கள் மற்றும் என் அப்பாவின் நம்பிக்கையை உடைக்கக்கூடாது என்பதிலும், நான் ஆரம்பித்த நிறுவனம் தோல்வி அடையக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்தேன். எனவே கொரோனா பரவல் காலகட்டத்திற்கு முன்பு, என் நிறுவனத்தின் மூலம் வந்த வருவாயை முதலீடாக வைத்து, எனது அடுத்த நிறுவனத்தை ஆரம்பித்தேன். அது தான் இப்பொழுது வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

உங்களுடைய முன்னுதாரணம் யார்?

பெண்கள் தான் எப்போதும் என்னுடைய முன்னுதாரணம். ஏனென்றால், வீட்டு வேலைகளை செய்து, குடும்பத்தை கவனித்து, அலுவலகத்துக்கும் சென்று பணியாற்றும் திறன் கொண்டவர்கள் அவர்கள். வீட்டில் உறுதுணையாக யாரும் இல்லையென்றாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும் பெண்களை நினைத்தால் ஊக்கம் தானாக பிறக்கும்.

தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு நீங்கள் தரும் யோசனை என்ன?

இன்றைய காலகட்டத்தில், ஒரு தேவைக்கான சரியான தீர்வை நீங்கள் கண்டுபிடித்தால் போதும். அதற்கான வரவேற்பும், வாய்ப்புகளும் சமூகத்தில் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, வீட்டில் உணவு சமைக்க முடியாதவர்களின் தேவைக்காக, நல்ல உணவுகளை வீட்டிற்கே கொண்டு சென்று டெலிவரி செய்யும் தீர்வுதான் 'உணவு டெலிவரி செயலிகள்'. அவற்றுக்கு தற்போது அதிக வரவேற்பு உள்ளது. அதுபோல, மக்களின் தேவைகளை அறிந்து, அதற்கான தீர்வுகளை உங்கள் தொழிலின் மூலம் கொடுத்தால் எளிதாக வெற்றி பெற முடியும்.

சமூக முன்னேற்றத்தில் உங்களின் பங்களிப்பு என்ன?

நல்ல குறிக்கோளைக் கொண்டு மாரத்தான் போட்டிகளை நடத்தும்போது, எங்கள் நிறுவனம் மூலமாக டிக்கெட்டுகளை இலவசமாக சந்தைப்படுத்தி விற்றுத் தருகிறோம். பழங்குடியின மக்கள் கல்வி கற்பதற்கு தேவையான பொருட்களை வழங்கி இருக்கிறோம். சாலை ஓரத்தில் வசிக்கும் மக்கள், சொந்தமாக தொழில் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து தரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.


Next Story